திண்டுக்கல்:திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்ற ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்தனர். இதில் இருவர் தீக்குளிக்க முயன்றனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்வது வழக்கம். நேற்று கலெக்டர் விஜயலட்சுமி மலைக்கோட்டையில் கிரிவலத்திற்கு தடை விதித்து இருந்தார்.நேற்று ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மலைக்கோட்டை அடிவாரத்தில் பத்மகிரீஸ்வரர் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் தடையை மீறி ஊர்வலமாக புறப்பட்டனர். இதையடுத்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மற்றும் கட்சியினர் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக் கட்டாக துாக்கி கைது செய்தனர்.
தனியார் மண்டபத்தில் அடைக்கபட்டோரில் இருவர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்தனர்.
கைதை கண்டித்து திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் முன்பு சாலையில் அமர்ந்து ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அதேநேரத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கிரிவலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததால் அவர்களையும் கைது செய்தனர்.
பழநியில் கைதுபழநியில் ஹிந்து முன்னணி மதுரை கோட்ட பொறுப்பாளர் பாலன் தலைமையில், செயலாளர் ஜெகன் உட்பட 20 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேபோல் ஒட்டன்சத்திரத்தில் ஹிந்து முன்னணி கிழக்கு மாவட்ட செயலாளர் ரகுபதி தலைமையில் பஸ் மறியல் செய்த 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE