ஆனைமலை:ஆழியாறு பூங்காவுக்கு எதிரே, பொதுப்பணித்துறையின் கடைகளை ஏலத்தில் எடுத்தவர்கள், கொரோனா நிவாரணமாக ஒப்பந்த கால நீட்டிப்பு செய்துதர, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆழியாறு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, பொதுப்பணித்துறை சார்பில் பூங்காவின் எதிரில், 12 வணிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளுக்கு, 2017 நவ., மாதம் ஏலம் நடத்தப்பட்டது.மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த காலம் முடிந்துள்ளது. இந்நிலையில், கொரோனா நிவாரணமாக கடைகளின் ஒப்பந்த காலக்கெடுவை நீட்டித்து தர, சிறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறு வியாபாரிகள் கூறியதாவது:கொரோனா பாதிப்பால், சுற்றுலா தடைபட்டு, முழு ஊரடங்கால், ஒன்பது மாதங்களுக்கு மேலாக, கடைகள் பூட்டப்பட்டு வருமானமின்றி கடும் சிரமத்தை சந்தித்தோம். அரசு பலவகை சிறு, குறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது.அதேபோல், எங்களின் வாழ்வாதாரம் காக்க கொரோனா நிவாரணமாக, சுற்றுலா தடை செய்யப்பட்ட கால அளவுக்கு, ஒப்பந்தத்தில் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும். நீட்டித்த காலம் முடிந்ததும், மறு ஏலம் நடத்த வேண்டும்.இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்ததுடன், கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன் கூறுகையில், ''கடை ஏலம் எடுத்தவர்களின் கோரிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது. அரசு தரப்பிலிருந்து இன்னும் எவ்வித பதிலும் வரவில்லை. ஏலம் நடத்தப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட கடைகளின் காலக்கெடு, கடந்த மாதம், 27ம் தேதியுடன் முடிந்தது. கடைக்காரர்கள் உடனடியாக கடைகளை காலி செய்து, அரசிடம் வழங்க வேண்டும்.அல்லது, அரசு உத்தரவுப்படி, மூன்று ஆண்டுகளின் ஏலத்தொகையின் சராசரி தொகையில், 10 சதவீதம் சேர்த்து அரசுக்கு செலுத்தினால், ஓராண்டுக்கு கால அவகாசம் நீட்டித்து தரப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE