கோர்ட் செய்தி

தமிழ்நாடு

2020ல் உயர்நீதிமன்றத்தின் முத்திரை பதித்த முக்கிய வழக்குகள்

Added : டிச 30, 2020
Share
Advertisement
மதுரை:மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைத்தது, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது உட்பட 2020 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த பல உத்தரவுகளில் முத்திரை பதித்த முக்கிய வழக்குகளின் மீள்பார்வை இது.ஜல்லிக்கட்டு* 2020 ஜனவரியில் தைப் பொங்கலை யொட்டி மதுரை அவனியாபுரம்,

மதுரை:மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைத்தது, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது உட்பட 2020 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த பல உத்தரவுகளில் முத்திரை பதித்த முக்கிய வழக்குகளின் மீள்பார்வை இது.

ஜல்லிக்கட்டு* 2020 ஜனவரியில் தைப் பொங்கலை யொட்டி மதுரை அவனியாபுரம், அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழுவே நடத்த வேண்டும். பாலமேட்டில் 'கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி,' ஜல்லிக்கட்டை நடத்தலாம். அதை நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு மேற்பார்வை செய்யும்.

நீதிபதிக்கு மதிப்பூதியமாக தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் (மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம்) நன்கொடையிலிருந்து கலெக்டர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் எம். துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வு உத்தரவிட்டது. *பிப்ரவரியில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்த நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வு தீர்ப்பு.

*கொரோனா ஊரடங்கில் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டதாக பதிவான வழக்கில் வங்கதேசம், இந்தோனேசியாவைச் சேர்ந்த 31 பேர், 'சுற்றுலா விசா விதிகளை மீறி இந்தியாவில் மத பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு இந்தியா வரமாட்டோம் என உறுதியளிக்கிறோம்' என உத்தரவாதம் அளித்ததன் பேரில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஜாமின் அனுமதித்தார்.

*வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் சேலம் மண்டல போலீஸ் ஐ.ஜி.,ஜெகநாதனின் குடும்பத்தினரிடம் உள்ள சம்பந்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவு.சாத்தான்குளம் சம்பவம்

*சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் 2 பேரும் இறந்தனர். இதை தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, 'நெல்லை சி.பி.சி.ஐ.டி.,-டி.எஸ்.பி.,அனில் குமார் விசாரணையை உடனே துவக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி.,விசாரணை மாநில அரசுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால் தொடரலாம். இல்லையெனில் சி.பி.ஐ.,க்கு மாற்ற அரசே முடிவு செய்யலாம்,' என்றனர். தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் ஜூலை 10 முதல் சி.பி.ஐ.,விசாரிக்கிறது.

*அனைத்து ரவுடி சரித்திரப் பட்டியல்களும் சரியான வழிமுறையை பின்பற்றி துவக்கப்பட்டு உள்ளதா என்பதை ஓராண்டிற்குள் ஆய்வு செய்ய, மாவட்டந்தோறும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை டி.ஜி.பி., அமைக்க வேண்டும் என நீதிபதி என்.சேஷசாயி உத்தரவு.

*பொது இடம் அல்லது அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொள்ளக்கூடாது. மீறி அமைத்தால் அதை அகற்றும்போது பக்தர்களின் உணர்வு புண்படுகிறது என ஆட்சேபித்து உரிமை கோர முடியாது. பக்தர்கள் விரும்பினால், அவர்கள் சொந்த நிலத்தில் அனுமதியுடன், விதிகளுக்குட்பட்டு மத வழிபாட்டுத்தலங்களை அமைக்கலாம்.

மத உணர்வை பாதிக்கிறது என்ற போர்வையில், சட்டம்-ஒழுங்கு அல்லது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவு.ஆன்லைன் விளையாட்டு தடை*சிக்கிமில் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தி, உரிமம் வழங்கும் சட்டம் உள்ளது. நாகலாந்தில் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் திறன் விளையாட்டுக்களை ஒழுங்கு படுத்துதல் சட்டம் உள்ளது.

தெலுங்கானாவில் பணம் வைத்து சூதாடும் அனைத்து விளையாட்டுக்களை தடை செய்யும் சட்டம் உள்ளது. தற்போதைய ஆபத்தான சூழலில் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்கு படுத்தி, கட்டுப்படுத்த மற்றும் உரிமம் வழங்க தகுந்த சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் என இந்நீதிமன்றம் நம்புவதாக ஜூலையில் நீதிபதி பி.புகழேந்தி உத்தரவிட்டார்.

'ஆன்லைன் ரம்மி மற்றும் இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மக்கள் அடிமையாகி தற்கொலையை நாடுகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என பொதுநல மனு தாக்கலானது. நவ.,24 விசாரணையின்போது அரசுத் தரப்பு, 'அவசரச் சட்டம் கொண்டுவந்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது,' என தெரிவித்தது. நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு,'தமிழக அரசை பாராட்டுகிறோம்,' என்றனர்.

*கிரானைட் வழக்கிலிருந்து பி.ஆர்.பி.,மற்றும் அவரது மகனை விடுதலை செய்த மற்றும் மதுரை முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலுார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதி பி.புகழேந்தி ரத்து செய்தார். நீதித்துறையில் ஊழல்*அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாமல் நேர்மையாக பணிபுரிய வேண்டும். ஊழல் சமூகத்திற்கு தீமையானது. ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல. இதை பல முன்னாள் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நீதித்துறையில் ஊழல் செயல்பாடுகளை மனசாட்சிப்படி அனுமதிக்க முடியாது. அரசு அலுவலகங்கள், நீதித்துறை மற்றும் அதன் வளாகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு.உள் ஒதுக்கீடு சட்டம் - நீதிபதி கண்ணீர்*அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தமிழக சட்டசபையில் செப்.,15 ல் நிறைவேற்றப்பட்டது.

அம்மசோதா கவர்னரின் இசைவிற்காக அனுப்பப்பட்டது. சட்டத்தை 2020-21 கல்வியாண்டில் நடைமுறைப் படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட மனு தாக்கலானது.

கவர்னர் இசைவு அளிப்பது, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் குறித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு அதிருப்தி தெரிவித்தது. கிராமப்புற மாணவர்களின் நிலையை எண்ணி நீதிபதி என்.கிருபாகரன் கண்கலங்கினார். நவ.,2ல் அரசுத் தரப்பு, 'சட்டத்தை நடை முறைப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட மசோதாவிற்கு கவர்னர் இசைவளித்துள்ளார்,' என தெரிவித்தது. நீதிபதிகள், 'அனைவரையும் பாராட்டுகிறோம். மகிழ்ச்சி,' என்றனர்.

*பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை 'டிவி'களில் ஒளிபரப்பத் தடை விதித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது.

*உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதில் விதிமீறல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கவும், சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பதிவாளர் ஜெனரலுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு.ஊடக செய்திக்கு முக்கியத்துவம்

*குற்றங்கள், விதிமீறல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல தனிப்பிரிவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு.

*சமையல் எண்ணெய்யை உதிரியாக விற்பனை செய்வதை உணவுப் பாதுகாப்பு சட்டம் தடை செய்துள்ள நிலையில், எப்படி அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி, சில்லரை அடிப்படையில் உதிரியாக (பேக்கிங் செய்யாத) சமையல் எண்ணெய் விற்பனை செய்ய நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு தடை விதித்தது.

*தமிழக அரசு வழங்கிய அனைத்து இலவச பட்டாக்களையும் மறு சீராய்விற்கு உட்படுத்த வேண்டும். உண்மையான தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை வி.ஏ.ஓ.,க்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

தகுதியற்றவர்களுக்கு இலவச பட்டா வழங்கியிருந்தது உறுதியானால் தகுந்த மேல் நடவடிக்கை எடுக்க தமிழக வருவாய்த்துறை செயலாளர் துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு.

*நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய், பொதுப்பணி, காவல்துறையினர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அக்குழு நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும். அதன் செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பரிந்துரைத்தது.இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2020ல் வழங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X