வால்பாறை:வால்பாறைக்கு, பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில், அரிய வகை பறவைகள் காணப்படுகின்றன. அக்காமலையில், தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட, கிராஸ் ஹில்ஸ் பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால், சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக, தளர்வுகள் காரணமாக தடை விலக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்தாண்டு, வால்பாறையில் பருவமழை அதிகளவு பெய்ததால், இயற்கை வளம் செழித்து பசுமையாக காணப்படுகிறது. பருவமழைக்குபின் தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால், பறவைகளும் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளன.இது குறித்து, பறவை ஆராய்ச்சியாளர் செல்வகணேஷ் கூறியதாவது:வால்பாறையில் பொங்கல் தினத்தன்று பறவைகளை கண்டு பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கணக்கெடுப்பு பணி ஆண்டு தோறும் நடக்கிறது. இதனால், பல பொது பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடிகிறது.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வால்பாறைக்கு வராததால், சுற்றுச்சூழல் மாசுபடாமல் உள்ளது. இதனால், பறவைகள் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளன. குறிப்பாக, வால்பாறை நகரில் வெண்கழுத்துநாரை, மடையான், கரைக்கொக்கு போன்ற பறவைகள் முகாமிட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.தற்போது உள்ளது போன்று, வாகனங்களால் இயற்கை மாசுபடாமலும், வனச்சூழலை பாதுகாக்கவும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE