முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் மரித்துப் போன மனிதர் மீது இன்று பலருக்கு கரிசனம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், மறைந்தபின்னரும் வாழும் அவரது ஓட்டு வங்கி. அ.தி.மு.க.,வின் நிறுவனர் என்பதால் அ.தி.மு.க.,வினர் மட்டுமே அவரை உரிமை கொண்டாடி வந்தார்கள்.
ஆனால் இன்றைக்கு, "எம்.ஜி.ஆரின் நீட்சி நான்" என்கிறார் கமலஹாசன். மடைமாற்றிக் கொள்வது போல மடி மாற்றிக்கொண்டிருக்கிறார். சிவாஜி மடி இப்போது எம்.ஜி.ஆர். மடியாகியிருக்கிறது.எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் பாக்கியராஜ் தொடங்கி எத்தனையோ நடிகர்கள் முதல்வர் கனவோடு அரசியல் களத்துக்கு வந்தார்கள். இவர்களெல்லாம் ஒன்றை மறந்து போனார்கள். எம்.ஜி.ஆர் பயணித்த சினிமா மற்றும் அரசியல் பயணம் கரடு முரடானது. அவரை யாரும் துாக்கிவிடவில்லை.
அதுபோல எம்.ஜி.ஆர். சட்டென அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்துவிடவில்லை.1953-ல் தி.மு.க.,வில் சேர்ந்து 1962ல் எம்.எல்.சி., ஆகி, 1967ல் எம்.எல்.ஏ.,வாக வளர்ச்சிபெற்று 1972ல் கட்சி ஆரம்பித்து 1977 முதல் 1987 வரை முதல்வராக நீடித்தவர் எம்.ஜி.ஆர். 1967ல் எம்.ஜி.ஆர். குண்டடிபட்டதும் அவருடைய செல்வாக்கு கிர்ரென உயர்ந்தது.பெண்களிடம் செல்வாக்கு வெகுவாக அதிகரித்தது.
ஓரங்கட்டப்பட்டார்
1971 தேர்தலில் தி.மு.க., 184 தொகுதிகளில் வென்றது.இந்த மிகப்பெரிய வெற்றிக்கு எம்.ஜி.ஆரின் பிரசாரமும் காரணம். எம்.ஜி.ஆரை ஓரங்கட்ட தி.மு.க., தலைவர்கள் சிலர் தீர்மானித்தார்கள்.அதன் தொடக்கமாகத் தி.மு.க.,வின் உட்கிளைகளாகச் செயல்பட்டுவந்த எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் மீதான புறக்கணிப்புத் தொடங்கியது. இதை எம்.ஜி.ஆர் உணர்ந்தார்.
அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களையும் முசிறிப்புத்தன் தலைமையில் இயங்கி வந்த அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத்தில் பதிவு செய்ய எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். ரசிகர் மன்றங்களைத் தி.மு.க.,வின் பிடியிலிருந்து மெல்ல நகர்த்தி தனது அரசியல் தளமாக்கினார் எம்.ஜி.ஆர். அரசியலை நோக்கியான அவரது காய் நகர்த்தல் கச்சிதமாக இருந்தது."கணக்குக் கேட்டார்" என்பதற்காக 1972 ல் எம்.ஜி.ஆர். தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்டார்.
காங்கிரசுக்குப் போவதற்காக எம்.ஜி.ஆர் இப்படிச் செய்கிறார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் தனிக்கட்சி கண்டார். தனது அரசியலை நடிக்கும் திரைப்படங்களில் புகுத்தினார். ஆளும்கட்சியான தி.மு.க.,வின் இம்சைகளை எதிர்கொண்டார்.
சுற்றுப்பயணம்
அ.தி.மு.க., உருவானநிலையில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தைத் தமிழகமே பேசியது. அவர்பயணித்த ரயில், மக்கள் வரவேற்பால் பலமணிநேரம் தாமதமானது. ஆளும்கட்சியான தி.மு.க.,வின் அடக்குமுறைகளை அ.தி.மு.க.,வினர் முழுபலத்துடன் எதிர்கொண்டனர். 1973 ல் நடைபெற்ற திண்டுக்கல் லோக்சபா இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்தார். அதற்குக்காரணம் அனைவரும் எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னமாகவும் எளிதில் வரையக்கூடிய சின்னமாகவும் அது இருந்தது.
"இரட்டை இலை, உதயசூரியன் முன் எரிந்து சாம்பலாகப் போய்விடும்" என்று தி.மு.க., பிரசாரத்தின் போது பேசப்பட்டது. "இதுவரை உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுகேட்ட எம்.ஜி.ஆர்., இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுகேட்டு வருகிறார். மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயம் தோல்விதான்" என்ற விமர்சனங்களை அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அ.தி.மு.க. வேட்பாளர் மாயதேவர் ஒரு லட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். தி.மு.க., மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
சட்டசபைக்காக நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., முதன்முதலில் கோவை மேற்கு சட்டசபை இடைத்தேர்தலை சந்தித்து. இதில் இரட்டை இலை சின்னத்தில் அரங்கநாயகம் 32 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரட்டை இலை எம்.எல்.ஏ.,வாகச்சட்டசபையில் அமர்ந்தார். அப்போது கருணாநிதி முதல்வர்.
சாதுர்யம்
1977 சட்டசபைத் தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார் எம்.ஜி.ஆர். 1980 லோக்சபா தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்றது. இரண்டு தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றிக் கண்டது. அத்தோடு எம்.ஜி.ஆர்., தலைமையிலான ஆட்சியும் கலைக்கப் பட்டது. தோல்வியின் வலியை உணர்ந்தார் எம்.ஜி.ஆர்.
அவர் பக்கமிருந்த தலைவர்கள் சிலர் தி.மு.க.,வுக்குத் தாவினர். 1980 சட்டசபைத் தேர்தல் வந்தது. லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தார். தன்னை எதிர்த்தவர்களை அரவணைக்க முடிவு செய்தார். இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்தார். பழ. நெடுமாறன், குமரிஅனந்தன் போன்றோரையும்கூட்டணியில் இணைத்துக் கொண்டார். கிராமப்புறம் சார்ந்த தொகுதியில் நிற்குமாறு கட்சியினர் யோசனை சொன்னார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆர். முடிவு செய்தது மதுரை மேற்குத்தொகுதி. "அந்தத் தொகுதியில் படித்தவர்கள் அதிகம்" என்று முணுமுணுத்தார்கள்ள். ஆனால் எம்.ஜி.ஆர். கணக்கு வேறுவிதமாக இருந்தது. அந்தத்தொகுதிக்கு உட்பட்ட கணிசமான வார்டுகளில் கவுன்சிலராக இருந்தவர்கள் அ.தி.மு.க.,வினரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும். அதனால் களப்பணி பிரச்னை இல்லாமல் நடக்கும் என எம்.ஜி.ஆர். நினைத்தார்.
எம்.ஜி.ஆரை எதிர்த்துப் பழக்கடை பாண்டியன் என்பவரைத் தி.மு.க., நிறுத்தும் என்ற தகவல் கசிந்ததும், அவரை அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் "டச்"சிங்கான பேச்சால் வெற்றி சாத்தியமாயிற்று. மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார்.
மக்களோடு இருந்தார்
1984 சட்டசபைத் தேர்தலின்போது அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்த எம்.ஜி.ஆர் அங்கிருந்தே ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்றார். பேச்சாற்றலை இழந்து தாயகம் திரும்பினார். எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றியிருந்த 1987 ஜனவரி 1 ல் ஆண்டிப்பட்டி தொகுதி சென்று மக்களைச் சந்திக்க விரும்பினார். அதற்காக மதுரை வந்து சர்க்யூட்ஹவுசில் தங்கினார்.
காலையில் அறைக்கதவைத் திறந்து பார்த்த எம்.ஜி.ஆர்.,வெளியே தனக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல மக்கள் காத்திருப்பதைக் கண்டார். அதிகாரியை அழைத்துஒரு நாற்காலியைப் போடச் சொன்னார். சர்க்யூட் ஹவுஸ் வாசலை ஒட்டிய சாலையில்நாற்காலி போடப்பட்டதும் அந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். மக்கள் முண்டியடித்து அவரைச் சந்தித்துக் கை குலுக்கினார்கள்.மனுக்களைக் கொடுத்தார்கள். மாலைகள் போட்டார்கள்.
கூட்டம்முண்டியடித்தபோது போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்துகையில் ஒரு பெண்ணின் கைதடுப்புகம்பில் அழுத்தி காயமேற்பட்டது. இதனைக் கண்ட எம்.ஜி.ஆர் அந்தக் காவலரைக் கூப்பிட்டு எச்சரித்தார். மக்களை சந்தித்த நிறைவுடன் அறைக்கு சென்றுவிட்டார். இன்றைக்கு ஆட்சியிலிருக்கும், ஆட்சிக்கு வரத்துடிக்கும் எத்தனை தலைவர்கள் மக்களோடு மட்டும் இருக்கிறார்கள்?
1987 துவக்கத்தில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டங்களில் பங்கேற்றார். கூட்டங்கள் இரவு நேரத்தில் ஏற்பாடாகியிருந்தது. அவருக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாதே என மருத்துவர்களும் அதிகாரிகளும் பதற்றத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் பேசிவிட்டு முடிக்கும் நேரத்தைக் கணக்கிட்டு எம்.ஜி.ஆரை மதுரையிலிருந்து அழைத்து வருவார்கள். காரணம், அவர் மேடைக்கு வந்தவுடன் பேசவைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பது மருத்துவர்களின் கண்டிஷன்.
எம்.ஜி.ஆர் செல்வதைக் காண இரவு எத்தனை மணியானாலும் பொதுமக்கள் சாலையோரத்தில் காத்திருப்பார்கள். எம்.ஜி.ஆர் கையசைப்பார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கார் கண்ணாடிகளைமூடிவிடவேண்டும் என டாக்டர்கள் வற்புறுத்தவே எம்.ஜி.ஆரால் தவிர்க்க முடியவில்லை. என்றாலும் காரின் உள்ளே இருந்தவாறு கையசைத்திருக்கிறார். கண்ணாடி மூடியிருப்பதால் அது வெளியே இருப்பவர்களுக்குத் தெரியாது.
இது குறித்து டாக்டர் ஒருவர் எம்.ஜி.ஆரிடம், "நீங்கள் காருக்குள் கையசைப்பது வெளியே இருக்கும் மக்களுக்குத் தெரியாது. பின் ஏன் கையசைக்கிறீர்கள்" எனக் கேட்டதற்கு " உங்கள் நிர்பந்தம் கண்ணாடியைத் திறந்து கையசைக்க முடியவில்லை. ஆனால், நான் கையசைப்பேன் என்ற நம்பிக்கையில் கையசைக்கிறார்கள். அவர்களை ஏமாற்றக்கூடாது" என்றாராம்.பேச்சால் அல்ல. மனதால் மக்களை ஆண்ட தலைவராக இருந்தார் அவர்.
மனதில் உறுதி
உடல் நலமின்றி இருந்தபோது கூட அவரது மன உறுதி குறையவில்லை. இன்றைக்கு கட்சித் தலைவர்களின் கூட்டங்களுக்குக் கொஞ்சம் கூட்டம் வருகிறதென்றால் அவர்களின் பேச்சைக் கேட்பதற்காகவும் "எதையாவது" எதிர்பார்த்து வரும்கூட்டம் தான் அது.
சிகிச்சைக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரால் தெளிவாகப் பேசமுடியவில்லை. என்றாலும் மக்கள் மத்தியில் பேசவேண்டும் என்ற ஆவலால் பேச்சுப்பயிற்சிக்காக ஒரு டாக்டரை அழைத்து வருவார்.அவர் அளிக்கும் பயிற்சியின்படி பேசுவார்.
ஒருமுறை மதுரையில் மேடையேறி அவர் மைக்முன் நின்றபோது வார்த்தைகள் வலம்வர தடுமாறின. அவ்வளவு தான் அடுத்த வினாடி, "போதும் தலைவா... பேசவேண்டாம்..." என மக்கள்கூட்டம் அழுகையோடு உத்தரவிட்டது. ஒரு தலைவன் மீது மக்கள் கொண்ட இந்த வாஞ்சை தமிழகம் இதுவரை கண்டிராதது. எம்.ஜி.ஆரை பொறுத்தவரை ஆட்சிக்கு வரவேண்டும். அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லை.
சூழலும், சுற்றியிருப்பவர்களும் அவரை அரியணையை நோக்கி நகர்த்தினார்கள். அவரும் அதை வசப்படுத்திக் கொண்டார்.எம்.ஜி.ஆர் நடிகராக இருக்கும் போதும் சரி, அரசியலுக்கு வந்த போதும் சரி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அவமானங்களைச் சந்தித்தார். மலையாளி, அட்டைகத்தி வீரர் என்றெல்லாம் கேலி செய்யப்பட்டார். அனைத்தையும் தாண்டி வெற்றியைப் பெற்றார்.
வசீகரமான நடிகர் என்பதற்காக மட்டுமே எம்.ஜி.ஆரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையும் தாண்டி ஏதோ ஒருவகையிலான நம்பிக்கையை அவரிடம் வைத்திருந்தார்கள். மனிதநேயத்துடனான அவரது அணுகுமுறை மக்களைக் கவர்ந்தது. வெற்றி சாத்தியமானது. இன்றைய புதுத்தலைவர்களிடம் இவை இருக்கின்றனவா? எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆகமுடியுமா?
-ப. திருமலை, பத்திரிகையாளர்
மதுரை. 84281 15522
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE