பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா, அரசியல் வேணாம்… நீ மட்டும் போதும் தலைவா!

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020
Share
Advertisement
ரஜினியின் அரசியல் முழுக்கு: உருகும் ரசிகர்கள்'இப்போது வராவிட்டால் எப்போதும் வாய்ப்பில்லை' என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த நடிகர் ரஜினி, உடல்நிலையை காரணம் காட்டி… இனிமேல் எப்போதும் வாய்ப்பில்லை' என்பது போல அரசியலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். காலம் கைகூடி ரசிகர்களின் கனவும் நனவாகப் போகும் நேரத்தில் மீண்டும் ரஜினியின் உடல்நலம்

ரஜினியின் அரசியல் முழுக்கு: உருகும் ரசிகர்கள்
'இப்போது வராவிட்டால் எப்போதும் வாய்ப்பில்லை' என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த நடிகர் ரஜினி, உடல்நிலையை காரணம் காட்டி… இனிமேல் எப்போதும் வாய்ப்பில்லை' என்பது போல அரசியலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். காலம் கைகூடி ரசிகர்களின் கனவும் நனவாகப் போகும் நேரத்தில் மீண்டும் ரஜினியின் உடல்நலம் பின்வாங்கி பயமுறுத்திவிட்டது. திரையில் அவரை ரசித்த ரசிகர்கள் அரசியலில் அவர் ஆளுமையை கண்டு ரசிக்க ஆசைப்பட்ட நிலையில்,இந்த அறிவிப்பு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது…

மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் மனந்திறக்கின்றனர்.
உடல்நலம் தான் முக்கியம்

சிவகுருநாதன், ரஜினி மன்ற 13வது வார்டு இளைஞரணி செயலாளர், மதுரைஅவர் கட்சி ஆரம்பித்தவுடன் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஆனால் உடல்நிலை அதைவிட முக்கியம். அவர் நல்லா இருந்தால் போதும். கட்சி துவங்காவிட்டாலும் அவர் தான் எங்கள் தலைவர். உடல்நிலை சீரான பின் சினிமாவில் தொடர்ந்து நடிக்கணும்.

அப்போதே இதை எதிர்பார்த்தோம்

அருண்குமார், ரசிகர் மன்ற மாநகர் இளைஞரணி இணைச் செயலாளர், மதுரைதலைவர் தமிழருவி மணியனை அழைத்து பேசிய போதே, இந்த முடிவை அறிவிப்பார் என எதிர்பார்த்தோம். மக்களுக்காக அரசியலுக்கு வருவேன் என ஆசையுடன் கூறினார். உடல்நிலை சரியில்லாததால் தானே இந்த முடிவுக்கு வந்துள்ளார். அதனால் வருத்தமில்லை. அவர் நடிக்க வேண்டாம், அரசியலுக்கு வரவேண்டாம். உடல்நலத்தோடு இருந்தாலே போதும்.

மறுபரிசீலனை செய்ய மன்றாடுகிறோம்

அழகர், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணை செயலாளர், மதுரை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. நாற்பதாண்டுகளாக ரஜினி தலைமையில் மக்களுக்கு சேவை செய்யலாம் என காத்திருந்தோம். அவரது அறிவிப்பு தமிழக ஊழல் கட்சிகளுக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளது. ரஜினி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என விரும்புகிறோம். அதே வேளையில் தமிழகத்தில் பெரிய தலைவர்களின்றி தத்தளித்து கொண்டுள்ள மக்களை காப்பாற்ற தன் முடிவை ரஜினி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எந்த முடிவு எடுத்தாலும் ஏற்பர்

குமாரவேலு, ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., ரஜினி மன்ற ஆலோசகர், மதுரை அரசியலை காட்டிலும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக ஆரோக்கியமாக இருந்தாலே போதும். இத்தனை ஆண்டுகளாக மக்கள் மன்றத்தின் பெயரால் நலத்திட்டங்களை நிர்வாகிகள் செய்து வந்துள்ளனர். எனவே அரசியலுக்கு ரஜினி வராதபோதும் மன்றத்தினரின் மக்கள் சேவை தொடரும். எந்த முடிவுமே ரஜினி தான் எடுப்பார். அதுபோல இந்த முடிவையும் அவரே எடுத்திருப்பார்.

ஏமாற்றம்

சாருஹாசன், ரசிகர், அய்யங்கோட்டை கட்சி துவக்குவதாக முதலில் ரஜினி அறிவித்தபோது அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக உருவெடுப்பார். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, நல்லது செய்வார் என இளைஞர்கள் எதிர்பார்த்தனர். தற்போது கட்சி துவக்கவில்லை என தெரிவித்துள்ளது எங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. எப்போதுதான் இரு திராவிட கட்சிகளுக்கு பதிலாக மாற்றத்தை உருவாக்குவது எனத் தெரியவில்லை.

தமிழகத்தின் துரதிர்ஷ்டம்

முருகானந்தம், 57வது வட்ட செயலாளர், மதுரைஅவர் அரசியலுக்கு வந்தால்தான் நல்லது செய்ய முடியும் என்பதில்லையே. எப்போதும் போல் அவரும், நாங்களும் மக்களுக்காக நற்பணியை செய்து கொண்டே இருப்போம். உடல்நிலை காரணமாக அவர் வராதது தமிழகத்திற்குதான் துரதிர்ஷ்டம்.

மனதளவில் என்றும் அவரே முதல்வர்

பாக்யா பழனி, ரசிகை, மதுரைதமிழகத்தில் யார் ஆட்சி செய்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு அவர் தான் 25 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். தமிழகத்தை ஆண்டவனால் இனிமேல் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு மீண்டும் தி.மு.க., அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைக்கும் சூழ்நிலை தான் அவரது இந்த முடிவு ஏற்படுத்தும். நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிய போதே மனதளவில் பாதித்துவிட்டோம்.

தே.மு.தி.க.,வை விஜயகாந்த் மனைவி பிரேமலதா இயக்குவது போல் ரஜினி வீடியோ கான்பரன்சிங்கில் தோன்றினாலே போதும் மற்றதை லதா, அவரது மகள் சவுந்தர்யா பார்த்துக் கொள்ள மாட்டார்களா.

இனியும் 'வேதவாக்கு' தான்

பாலமுருகன், ரசிகர், மதுரைஅவர் எது சொன்னாலும் எங்களுக்கு 'வேதவாக்கு' தான். அவரது உடல் நிலை குறித்து இந்த முடிவை எடுத்திருந்தால் வரவேற்கிறோம். அதேநேரம் அரசியல் அழுத்தங்களுக்காக இந்த முடிவு எடுத்திருந்தால் பல கோடி ரசிகிர்களுக்கு ஏமாற்றம் தான். 'ரசிகர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை' என்பதன் மூலம் அவர் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பு எங்களுக்கு தெரிகிறது. ஏதோ ஒரு அழுத்தம், அதிகாரம் அவரை கட்டிப்போட்டுவிட்டது.

உன் ஆரோக்கியமே முக்கியம்

சிவா, ரசிகர், மதுரைநீ கவலையின்றி ஓய்வுவெடு தலைவா. இதற்காக நீ வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. நான் சாகும் வரை உன்னை நேசித்து கொண்டே தான்இருப்பேன். வருத்தங்கள் மலையளவு இருக்கிறது. அதை விட உன் ஆரோக்கியமே எனக்கு முக்கியம்.

துளிகூட வருத்தமில்லை

பட்டிவீரன் ரகு, மாவட்ட செயலாளர்ரஜினி மக்கள் மன்றம், திண்டுக்கல் தலைவர் எவ்வழியோ அவ்வழியையே நாங்களும் பின்பற்றுவோம். ரஜினி மீது எங்களுக்கு துளிகூட வருத்தமில்லை. ரஜினி என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம். அவர் எடுத்த முடிவுக்கு நன்றி. ரஜினி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். எப்போதும் போல் ரஜினி மக்கள் மன்றம் பொதுமக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவோம்.

இனி விதியின் வழியில் தமிழகம்

டி. ஒச்சாத்தேவர், மாவட்ட இணைசெயலாளர், ரஜினி மக்கள் மன்றம், தேனிஅவர் அரசியலுக்கு வருவார் என நாங்கள் மன்றம் துவக்கவில்லை. அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் லஞ்சமில்லாத துாய நிர்வாகத்தை வழங்குவார் என எதிர்பார்த்தோம். அவர் அரசியலுக்கு வராததால் இனி விதியின் வழியில் தமிழகம் செல்லும். அவர் நுாறாண்டு நலமுடன் வாழ்ந்தால் போதும். இதுவரை அவரை யாரும் குறை சொன்னது இல்லை. அரசியலுக்கு வந்தால் பலரும் கண்டபடி பேசுவார்கள் என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது. அவர் அரசியலுக்கு வராதது மகிழ்ச்சிதான்.

தலைவரின் நலனே எங்கள் குறிக்கோள்

பி.ஆர்.பாபு, ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட தலைவர், ராமநாதபுரம்தலைவர் முடிவே எங்கள் முடிவு. தலைவரின் நலனே எங்களின் குறிக்கோள். நாங்கள் சிறுவயதில் ரசிகர் மன்றம் துவங்கிய போது, அவர் கட்சி ஆரம்பிப்பார். எம்.எல்.ஏ., எம்.பி., ஆவோம் என்ற கனவெல்லாம் கிடையாது.இப்போதும் தலைவர் ரசிகராக இருப்பதையே நாங்கள் பெருமையாக கருதுகிறோம்.

எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.

எம்.ஆறுமுகம், ரசிகர், மானாமதுரைரஜினி நீண்ட ஆலோசனைக்கு பிறகு இதயத்தின் மிகுந்த வலியோடு இந்த முடிவை எடுத்துள்ளார்.தலைவர் அரசியலுக்கு வந்தாலும்,வராவிட்டாலும் எப்போதும் போல் நாங்கள் செய்கின்ற சேவையை செய்து கொண்டு தான் இருப்போம். அவர் நல்ல உடல் நலத்தோடு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.

தடையில்லா மக்கள் சேவை

எம்.தளபதி முருகன், மாவட்ட செயலாளர் ரஜினி மக்கள் மன்றம், விருதுநகர்.ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து 41 ஆண்டுகளாக ரஜினி மக்கள் மன்றம் மூலம் மக்கள் சேவையை மேற்கொள்ளவில்லை. ரஜினியை உள்ளப்பூர்வமாக ரசித்து தான் ரஜினி மக்கள் மன்றத்தை நடத்தி வருகிறோம். அவரது உடல் நலம் தான் முக்கியம். கட்சி துவங்குவது அல்ல. அவரது முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்கிறோம். ரஜினி மக்கள் மன்றம் மூலம் மக்கள் சேவை தங்கு தடையின்றி தொடரும்.

நமது நிருபர் குழு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X