மதுரை:தமிழகம், பிற மாநிலங்களில் என்.ஏ.பி.எல்., (நேஷனல் அக்ரிடியேஷன் போர்டு பார் டெஸ்ட்டிங் அண்ட் காலிபரேஷன்) சான்று பெறாத உணவு பகுப்பாய்வு மையங்களின் அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) அறிவித்துள்ளது,
என்.ஏ.பி.எல்., 1998ல் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் உருவாக்கப்பட்டு இந்திய தர கவுன்சிலில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. உணவு பகுப்பாய்வு மையங்கள் உட்பட பல்வேறு ஆய்வகங்களுக்கான சர்வதேச அங்கீகார சான்றை வழங்குகிறது. கருவிகள், பகுப்பாய்வு முறைகள் குறித்தும் வழிகாட்டுகிறது.
இதன்படி மதுரை, சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி என தமிழக அளவில் செயல்பட்டு வரும் 6 உணவு பகுப்பாய்வு மையங்கள் என்.ஏ.பி.எல்., சான்று பெற 2011ல் சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாகியும் சான்று பெறாத மையங்கள் கால அவகாசம் கேட்டு இதுவரை செயல்பட்டு வந்தன.இந்நிலையில் டிச., 31க்குள் சான்று பெற்றால் தான் அங்கீகாரம் தொடரப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன் அனைத்து மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக பகுப்பாய்வு மையங்கள் நன்றாக தான் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் என்.ஏ.பி.எல்., பெற்றால் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். அதற்கான அழுத்தம் தான் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., கொடுத்துள்ளது. விரைவில் என்.ஏ.பி.எல்., சான்று பெறமுயற்சிகள் நடக்கிறது. சான்று பெறும் வரை பகுப்பாய்வு மையங்கள் செயல்படுவதில் தடை ஏதும் இல்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE