சூலுார்:விவசாயிகளிடம் காய்கறிகள் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய, தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமை தயாராகி வருகிறது.கோவை தடாகம் சாலையில் உள்ள தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், அத்துறையின் வளர்ச்சி முகமை (டேன்கோடா) விற்பனை நிலையம் செயல்படுகிறது. இங்கு, காய்கறிகள், பழங்கள், ஜாம், ஜெல்லி, காபி மற்றும் டீத்தூள்கள் விற்கப்படுகின்றன. மேலும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் சிறு தானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் கண்ணம்பாளையம் அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் அழகு செடிகள், நெல்லி வற்றல் உட்பட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி கூறியதாவது:விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள், சூலுார், அன்னுார், சுல்தான்பேட்டை, மதுக்கரை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார் உட்பட மையங்களில் துவக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, விற்பனை மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.அங்குள்ள குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். உழவர் சந்தை விலையை விட, குறைந்த விலைக்கு காய்கறிகள் இங்கு விற்கப்படும். விற்பனையை விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE