பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சிலர், தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்கள் மற்றும் கிணறுகளில், பவுண்டரி மண் கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசுபட்டு சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கூடலுார் கவுண்டம்பாளையம் வட்டாரத்தில், விவசாயிகள் சிலர், தங்களுக்கு சொந்தமான நிலம், கிணறுகளில், பவுண்டரி மண்ணை கொட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விஜயகணபதி, பாலாஜி ஆகியோர் கூறியதாவது:பருவகாலங்களில் பெய்யும் மழை நீர், இங்குள்ள கருப்பட்டராயன் கோவிலை சுற்றியுள்ள பல்வேறு தடுப்பணைகளில் சேர்கிறது. நிலத்தடி நீர் பெருகி, ஆழ்குழாய் கிணறு, திறந்தவெளிக் கிணறுகளில் தண்ணீர் ஊற்று எடுக்கும். இதனால், இப்பகுதியில் வேளாண் தொழில் நடந்து வருகிறது. ஆனால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலர், தங்களுடைய சுய லாபத்துக்காக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் பவுண்டரி மண் எனப்படும் கழிவு மண், கழிவு பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளை கொண்டு, தங்களது கிணறுகளை மூடுகின்றனர். இதனால், நிலத்தடி நீர் பாதித்து நாயக்கன்பாளையம், கூடலுார் கவுண்டம்பாளையம் உட்பட பகுதிகளில் நடக்கும் விவசாயத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், இக்கழிவுகளை இரவு நேரத்தில் எரிப்பதால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, வசிப்பவர்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பெரியநாயக்கன்பாளையம் வருவாய்ஆய்வாளர் நுார்முகமது கூறியதாவது:கூடலுார் கவுண்டம்பாளையம் ஊர்பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அளித்த புகாரின் பேரில், டிப்பர் லாரிகளில் பவுண்டரி மண் கொண்டு வரும் வாகனங்கள் பிடிக்கப்பட்டன. சிலர், தங்களுடைய பட்டா நிலங்களில் பவுண்டரி மண்ணை கொட்டினாலும், அதனால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என, பொதுமக்கள் புகார் எழுப்பியதால், இனிமேல் பவுண்டரி மண்ணை கிணறுகளில் கொட்டக்கூடாது என எச்சரிக்கப்பட்டு, வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE