மயிலாடுதுறை:அரசின் இலவச பாட புத்தகங்களை பழைய இரும்பு கடையில் விற்பனை செய்த, மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர், கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் அரசின் இலவச பாடப்புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. ஆர்.டி.ஓ., மகாராணி தலைமையில் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கடையில் சோதனையிட்டனர். அங்கு பண்டல் பண்டலாக குவித்து வைக்கப்பட்டிருந்த 2019 - -20ம் கல்வி ஆண்டுக்கான இலவச பாடப் புத்தகங்கள் 2,066 கிலோ எடை கொண்ட 3,134 புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் போலீசில் புகார் அளித்தார். மயிலாடுதுறை போலீசார் பழைய இரும்புக் கடை உரிமையாளர் பெருமாள்சாமி, 56 மற்றும் மயிலாடுதுறை கிட்டப்பா மேல் நிலைப் பள்ளியில் புத்தகக் கிடங்கு பொறுப்பாளரும், மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளருமான மேகநாதன், 40 ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் மீதமிருந்தவை மயிலாடுதுறை கிட்டப்பா அரசு மேல்நிலைப்பள்ளி புத்தக கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெருமாள்சாமி, மேகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE