திருவண்ணாமலை:''அளவுக்கு அதிகமாக, ரஜினிக்கு அழுத்தம் கொடுத்து விட்டதால், அவர் அரசியலுக்கு வரவில்லை,'' என, தமிழக, காங்., தலைவர் அழகிரி கூறினார்.
திருவண்ணாமலையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ரஜினி போன்ற மனநிலையில் உள்ளவர்கள், ஒரு போதும் அரசியலுக்கு வர மாட்டார்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், அரசியலில் ஈடுபட முடியாது.
அவர், 1996ல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என, அழுத்தம் கொடுத்தபோது அதை மறுத்தார். அப்போது, அவரது உடல்நிலையும், செல்வாக்கும் நன்றாகவே இருந்தது. அப்போது அவர், கட்சி ஆரம்பித்திருந்தால், வெற்றி கிடைத்திருக்கும்.கருணாநிதியும், மூப்பனாரும் இணைந்து, ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதில்தான், அப்போது அவர் உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது கட்சி ஆரம்பிக்க அறிவித்த நிலையில், அவருக்கு, பா.ஜ.,வினர் அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்து விட்டனர்.
தமிழகத்தில், அ.தி.மு.க.,வை கையில் வைத்துக் கொண்டு, பா.ஜ.,வின் நேரடி ஆட்சியை நடத்த முடியும், என நம்பியதால், ரஜினிக்கு அழுத்தம் தரப்பட்டது.தமிழக அரசு அறிவித்த, 2,500 ரூபாய் பொங்கல் பரிசு பணம், மக்களை ஏமாற்றும் வேலை. கடந்த தேர்தல்களில், காங்., சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் வந்ததால், தேர்தல், பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE