நிஜத்தில் 'எலாஸ்டிக் கேர்ள்'
'இன்கிரடிபிள்' அனிமேஷன் படத்தில் வரும், 'எலாஸ்டிக் கேர்ள்' கதாபாத்திரம், ரசிகர்களை கவர்ந்தது. எலாஸ்டிகேர்ள், தனக்கிருக்கும் அதீத சக்தியால் உடலை வில்லாக வளைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார். அதுபோல, பிரிட்டனை சேர்ந்த, 12 வயது சிறுமி ஒருவர், தன் உடம்பை வளைத்து அசத்தியுள்ளார். யார்க் ஷயர் பகுதியை சேர்ந்த லிபர்டி பேரோஸ் என்ற இந்தச்சிறுமி, உடலை ரப்பர் போல வளைத்து ஓடும் ரயிலில் தொங்குவது, உடலை மடக்கி நடந்து செல்வது போன்ற சாகசம் செய்கிறார். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வான்கோழியை முழுங்கிய நாய்
முழு வான்கோழி இறைச்சியை தின்றுவிட்டு நகரமுடியாமல் இருக்கும் நாயின் படம் வலைதளவாசிகளை நகைப்புக்குள்ளாக்கியுள்ளது. ஸ்காட்லாந்தின் பிரஸ்ட்விக் பகுதியை சேர்ந்த டேவிட் பாரட் என்பவரின் வீட்டில் கிறிஸ்துமஸ் டின்னருக்காக முழு வான்கோழி சமைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை வீட்டில் வளர்க்கப்படும், 5 வயதான 'பப்பா' என்ற நாய், தின்றுவிட்டது. உருவத்தில் சிறிய நாயான பப்பா, வான்கோழி கறி முழுவதையும் தின்றதால் நடக்க முடியாமல் அப்படியே படுத்துவிட்டது. இக்காட்சியை படம்பிடித்து டேவிட் பாரட் வெளியிட, வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
பரிசுத்தமான மகிழ்ச்சி
எம்ரியே என்ற பார்வைத்திறன் குறைபாடுள்ள சிறுமிக்கு, மிகவும் பிடித்தமான பிரெய்லி ஹாரி பாட்டர் புத்தகங்களை, அவரது அத்தை பரிசளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில், பரிசை பிரிக்கும் சிறுமி, அதிலிருக்கும் புத்தகத்தை படிக்கிறார். அது, ஹாரி பாட்டர் புத்தகம் என உணர்ந்த பின், மிகுந்த உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார். இந்த வீடியோவை, சிறுமியின் அத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, புத்தகங்கள் வாங்க நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர்களை, கண்கலங்க வைக்கிறது.
பூனைக்கு 'வளைகாப்பு'
திருவேற்காட்டை சேர்ந்த ஜோதி குமார் என்பவர், தன் வீட்டில் நாய் மற்றும் பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார். இவர், வளர்த்து வந்த பூனை கர்ப்பமடைந்தது. பூனைக்கு வளைகாப்பு செய்ய ஜோதிகுமார் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, பூனையை அலங்காரம் செய்து நெற்றியில் பொட்டு வைத்து, நாற்காலியில் அமர வைத்தனர். பழங்கள், ஏழு விதமான உணவுகள் வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. பூனையின் இரு கால்களிலும் வரிசையாக வந்து, உறவினர்கள் வளையல்கள் அணிவித்தனர். உறவினர்கள், வீட்டின் மற்ற செல்ல பிராணிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இதன் படங்கள் வலைதளவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE