கொடைக்கானல் : கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் சப் கலெக்டர் சிவகுருபிரபாகரன் தலைமையில் நடந்தது.
இதில் நடந்த விவாதம் வருமாறு:
பேத்துப்பாறை அசோகன்: மலைப்பகுதியில் காட்டுயானையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு நிவாரணம் கோரி இரு ஆண்டுகளாகியும் நிவாரணம் கிடைக்கவில்லை. வனத்துறையினரை கேட்டபோது ஆவணங்கள் மாயமாகி விட்டதாக பதிலளிக்கின்றனர்.
சப்கலெக்டர்: வனத்துறையிடம் விசாரித்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வில்பட்டி சக்திவேல்: கால்நடை மருந்தகங்களில் டாக்டரின்றி வளர்ப்பு பிராணிகளுக்கு சிகிச்சை பெறமுடியாமல் பலியாகின்றன. கால்நடைத்துறை சம்பந்தமான திட்டங்களும் கிடைப்பதில்லை.
கால்நடை மருத்துவர்: பிப்ரவரி மாதத்தில் மலைப்பகுதியில் டாக்டர்களின் காலிப்பணியிடம் நிரப்பப்படும்.
கவுஞ்சி செல்வகணபதி: கோணலாறு அணையில் கசிவு ஏற்பட்டு பாசன வசதி பெறுவதில் பிரச்னை நீடிக்கிறது.
சப்கலெக்டர்: மார்ச் மாதம் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்குவதாக தெரிகிறது. இதன் பின் அணை சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.
கிளாவரை அருள்ஜோதி: கொடைக்கானல் வனக்கோட்டத்தில் இருந்த கிளாவரை பகுதியை அமராவதி கோட்டத்திற்கு மாற்றியுள்ளனர். இதனால் வனத்துறை விஷயங்களுக்காக 200 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது.
சப்கலெக்டர்: வனத்துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும்.
இவைதவிர, தோட்டக்கலைத்துறை திட்டங்களில் குறுவிவசாயிகளுக்கு மானிய திட்டங்கள் கிடைக்காதது, கேரட், பீன்ஸ் விதைகளை தரமற்றதாக வழங்குவது, வனவிலங்குகளால் விவசாயம் பாதிப்பது, சூரிய மின்வேலி மானியம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE