மதுரை : விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக மேலவளவு கிராமத்து பெண்கள் குழுவாக இணைந்து விதை நேர்த்திக்கான உயிர் உரம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை விவசாய கல்லுாரியின் வேளாண் அறிவியல் மையம் இதற்கான முதற்கட்ட பயிற்சி அளித்துள்ளது. உயிரியல் காரணியல் உற்பத்தி மையத் தலைவி பவானி கூறியதாவது: இங்கு நெல், வாழை உட்பட பல்வகை பயிர்கள் பயிரிடுகிறோம். நாற்று நடுவது, களையெடுப்பது தான் பெண்களின் பிரதான தொழில். இதை தாண்டி சாதிக்க நினைத்தோம். வேளாண் அறிவியல் மையம் கைகொடுத்தது. 'டிரைகோடெர்மா விரிடி' எனப்படும் உயிர் உரம் தயாரிக்க கற்றுத் தந்தனர். அதன்பின் குடுமியான் மலை, விநாயகபுரம் பயிற்சி மையங்களில் ஓராண்டு வரை பயிற்சி பெற்றோம்.
கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தின் 'ஐயாம் வாம்' திட்டத்தின் கீழ் தொழில் துவங்க ரூ.ஒரு லட்சம் மானியம் தந்தனர். உரத்தொழில் செய்ய ஊராட்சி இடம் கொடுத்தது. 2 மாதங்களுக்கு முன் தொழில் துவங்கினோம். சாக்பீஸ் பவுடரில் உயிர் உரத்தை ஒரு வாரம் வரை வளர்த்து அதன்பின் ஒரு கிலோ, அரை கிலோ பாக்கெட்டாக விற்கிறோம். 500 கிலோ தயாரித்ததில் 300 கிலோ உரம் எங்கள் பகுதியிலேயே விற்றோம். இதை விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும். விவசாயிகளும் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
விற்ற லாபத்தை மீண்டும் தொழிலில் முதலீட்டாக்கியுள்ளோம். வாரத்தில் 2 நாட்கள் வேலை செய்கிறோம். இன்னும் சம்பளம், லாபம் ஈட்டவில்லை. ஆனால் உரம் அதிகரித்து லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு சொந்தமாக தொழில் செய்கிறோம் என்ற சந்தோஷம் இருக்கிறது. அடுத்தகட்டமாக சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், ரைசோபியம் உயிர் உரங்கள் தயாரிக்க உள்ளோம் என்றார். தொடர்புக்கு : 99432 65649.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE