காஞ்சிபுரம் : சாலையோர நடைபாதை வியாபாரிகள் பலர், கடனுதவி பெற, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25ம் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.தொடர்ந்து, அத்தியாவசிய கடைகள் தவிர, சாலையோர கடைகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. இதனால், தினசரி வருவாய் மூலம் குடும்பம் நடத்திய, சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு, பிரதம மந்திரி ஆத்மா நிர்வா நிதி திட்டத்தில், வங்கி மூலம், 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுவதாக, மத்திய அரசு, மூன்று மாதங்களுக்கு முன் அறிவித்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் நகராட்சியில், சாலையோர நடைபாதை வியாபாரிகள், 700 பேர், மனு எழுதி, ஆதார் அட்டை நகல் இணைத்து, நகராட்சி அதிகாரிகளிடம் கொடுத்தனர். அவர்கள், அம்மனுக்களை, 'ஆன்லைனில்' பதிந்தனர். இந்நிலையில், நடைபாதை வியாபாரிகள் மனுவுக்கு விண்ணப்பித்தால், 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என, புரளி கிளம்பியுள்ளது. இதை நம்பி, நேற்று, நகராட்சி அலுவலகத்திற்கு, 1,000க்கும் மேற்பட்டோர் குவிந்து, சாலையோர நடைபாதை வியாபாரிகள் எனக்கூறி, மனுக்களை அளித்தனர்.
இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசு அளிப்பது கடனுதவி தான். பணம் பெற்றவர்கள், மாதாமாதம், குறிப்பிட்ட தொகையை, வங்கி கணக்கில் கட்ட வேண்டும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணம் கிடைப்பதாக புரளி பரவியதால், பலர் குவிந்தனர். அனைவரது மனுக்களும் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.எனினும், தகுதியுடைய நபர்களுக்கு மட்டுமே, கடன் தொகை வழங்கப்படும். கூட்டத்தை கட்டுப்படுத்த, ஐந்து கவுன்டர் திறக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE