வில்லியனுார் : குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைப்பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வில்லியனுார் அடுத்த அனந்தபுரத்தில் கடந்த மாதம் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறக்கப்பட்டது.ஏற்கனவே இருந்த பழைய குடிநீர் இணைப்புகளை அகற்றாமல், புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட கிராம மக்கள், நேற்று காலை 9:00 மணியளவில் கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வில்லியனுார் போலீசார் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, பழைய பைப் லைன் இணைப்புகளை கொம்யூன் ஊழியர்கள் துண்டித்தனர். அதனையேற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE