பெசன்ட் நகர் : மரபணு மாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பெசன்ட் நகர் கடற்கரையில், 'செல்பி ஸ்டாண்ட்' வடிவில் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பொது மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
நாடு முழுதும், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவுக்குள் பரவுமோ என்ற அச்சம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது.அதே வேளையில், மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு, மரபணு மாறிய கொரோனா தொற்று இருந்ததால், பாதுகாப்பு நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.ஊரடங்கு தளர்வால், பொது இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில், கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அங்கு செல்பவர்கள் மத்தியில், கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த, மாநகராட்சி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.பெசன்ட் நகர் கடற்கரையில், 'கொரோனா தடுப்பதில் எனக்கும் பங்கு உண்டு; எனக்கு தெரியும்; உங்களுக்கு? நான் கற்கிறேன்; உங்களுக்கும் கற்பிக்கிறேன்' என்ற மைய கருத்தில், 'செல்பி ஸ்டேன்ட்' பேனர் வைக்கப்பட்டு உள்ளது.விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனரில், முகம் மட்டும் தெரியும் அளவுக்கு ஒரு பெரிய வட்ட வடிவிலான ஓட்டை போடப்பட்டு உள்ளது.
அதில், பொதுமக்கள் நின்று முகத்தை காட்டி, புகைப்படம் எடுத்து கொள்ளலாம். பொதுவாக, அரசு வெளியிடும் எச்சரிக்கை, விழிப்புணர்வு வாசகங்களில், மாடல் துறையில் பணி புரிவோர் அல்லது முதல் பயனாளிகளின் புகைப்படம் இருக்கும்.செல்பி ஸ்டாண்ட்டில் எடுக்கும் புகைப்படமும், அதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. யார் வேண்டுமென்றாலும், புகைப்படம் எடுக்கலாம் என்பதால், கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் ஆர்வமாக முகத்தை காட்டி, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.அதை, உடனே, 'பேஸ்புக், வாட்ஸ் -ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE