ஊத்துக்கோட்டை : தரைப்பாலம் அமைக்க அதிகளவு ஆழத்தில் மணல் எடுப்பதால், இறந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்றின் மேல், பாலம் அமைக்கும் பணி, 28 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.போக்குவரத்து வசதிக்காக, போடப்பட்ட தற்காலிக தரைப்பாலம், சமீபத்தில் பெய்த மழையால், சேதம் அடைந்தது. கடந்த மாதம், 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட போக்குவரத்து, ஒரு மாதத்திற்கு பின், கடந்த, 25ம் தேதி, மாற்று வழியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.இதில், டூ- - வீலர், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்கிறது.
லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்வதற்காக, ஏற்கனவே சேதம் அடைந்த, தற்காலிக தரைப்பாலத்தை சீர்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஏற்கனவே போடப்பட்ட தற்காலிக சாலை அருகில், அதிகளவு ஆழத்தில் மணல் எடுத்து வருகின்றனர். ஊத்துக்கோட்டை பகுதியில், யாராவது இறந்தால், அவர்களின் சடலத்தை புதைக்க, எரிக்க, ஆரணி ஆற்றுப் பகுதியை பயன்படுத்தி வந்தனர்.தற்போது, மணல் எடுத்து வருவதால், சடலங்களை எடுத்து செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அரசு அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பள்ளங்கள் நிரப்பி, பொதுமக்கள் நடந்து செல்லும் பணி துவக்கப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE