சென்னை: நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என அறிவித்த நிலையில், அவரது கட்சி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட தமிழருவி மணியனும் அரசியலை விட்டு போவதாகவும், மீண்டும் வரமாட்டேன் எனவும் அறிவித்துள்ளார்.
வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், அக்கட்சிக்கு மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ரஜினி தனது நிலைப்பாட்டை மாற்றி 'இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை' என நேற்று (டிச.,29) திடீரென அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தமிழருவி மணியனும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:50 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. 2 திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல், ஊழல் மலிந்த சாக்கடையாக சரிந்துவிட்டது. மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றது தான் நான் செய்த ஒரே குற்றம்.
மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். திமுக.,வில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். ஆனால் நான் போகிறேன்; வரமாட்டேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE