திருப்பூர்: பரிகார பூஜை செய்வதாக கூறி, மூதாட்டியை கொன்று, ரூ.10 ஆயிரம், 5 பவுன் நகையை திருடி சென்ற போலி மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில், மூதாட்டியின் கணவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(66). டேபிள், சேர் விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். மனைவி ஈஸ்வரி(60). இவர்களது மகன் உதயகுமார்(35). இவரது மனைவி செல்வராணி(34). இவர்கள் பல்லடத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், ஆறுமுகம், ஈஸ்வரி ஆகியோர் கவலையில் இருந்தனர். மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, சக்திவேல்(35) என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர். இந்த விஷயம் உதயகுமாருக்கு தெரியாது. இன்று(டிச.,30) அதிகாலையில் பர்னிச்சர் கடையில் பூஜை, பரிகாரத்தை சக்திவேல் செய்துள்ளார். அப்போது ஆறுமுகமும், ஈஸ்வரியும் உடன் இருந்தனர். திடிரென கூர்மையான ஆயதத்தை எடுத்த சக்திவேல், முதலில் ஆறுமுகத்தை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதனால், அவர் இறந்ததாக நினைத்த சக்திவேல் பின்னர், ஈஸ்வரியை தாக்கி கொலை செய்துவிட்டு, 5 பவுன் செயின்,ரூ.10 ஆயிரத்தை திருடி கொண்டு, கதவை வெளிப்புறம் பூட்டிவிட்டு தப்பி சென்றார்.
காலை 7: 30 மணியளவில் மயக்கம் தெளிந்த ஆறுமுகம் கதவை தட்டினார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்தனர். ஆறுமுகம் ரத்த காயத்துடனும், ஈஸ்வரி இறந்த நிலையில் இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, ஈஸ்வரி உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகம் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணையில், சக்திவேல் போலி மந்திரவாதி என்பதும், அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது, மனைவியுடன் மயிலாடுதுறைக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு தனிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE