கோபி: புவிசார் குறியீடு பெற்ற, ஈரோடு மஞ்சளின் தனித்தன்மை, மருத்துவ குணம், நோய் எதிர்ப்பு சக்தி, தரம், நிறம் ஆகியவை, பிற பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு இருப்பதில்லை. இதனால், மஞ்சள் விளையும் பூமியான, ஈரோடு மாவட்டத்தில், அதன் வேளாண் முறைகளை அறிய, புதுச்சேரியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட விவசாய குழுவினர், கோபிக்கு நேற்று வந்தனர். அக்குழுவினர், கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள, 'குர்குமின்' ஆய்வகத்தை நேற்று பார்வையிட்டனர். அப்போது முதன்மை விஞ்ஞானி அழகேசன், ஈரோடு மஞ்சளின் மகத்துவம் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: ஈரோடு மஞ்சள் மாவட்டமாக உள்ளது. வெளித்தோற்றத்தை கொண்டே, காலங்காலமாக வியாபாரிகள், மஞ்சள் விலையை நிர்ணயம் செய்தனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், அரைத்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு, மஞ்சள் சந்தைப்படுத்தும் போக்கு அதிகரித்தது. ஐரோப்பா போன்ற நாடுகளில், குர்குமின் தரத்துக்கு வியாபாரிகள் முக்கியத்துவம் தருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சந்தைத்திறனை அதிகரிக்கவே, தமிழகத்தில் முதன் முறையாக, கோபியில் குர்குமின் ஆய்வகம் துவங்கியுள்ளோம். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், இங்குள்ள ஆய்வகத்தில் தங்கள் மஞ்சளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE