ஆத்தூர்: சொக்கனூரில், 26.30 கோடி ரூபாயில், பொன்னாளியம்மன் புது ஏரி அமைக்க, பூமி பூஜை விழா நடந்தது. தலைவாசல், வீரகனூர், சொக்கனூர் அக்ரஹாரத்தில், பொன்னி ஓடை குறுக்கே, 26.30 கோடி ரூபாயில், பொன்னாளியம்மன் ஏரி அமைக்க, பூமி பூஜை விழா, நேற்று நடந்தது. அதில், சேலம் கலெக்டர் ராமன் பேசியதாவது: பச்சமலை கிழக்கு பகுதியில், பொன்னாளியம்மன் ஓடை உற்பத்தியாகி, நேரடி பாசனத்துக்கு பயன்பாடின்றி, வீரகனூர் சுவேத நதியில் கலக்கிறது. இங்கு, புது ஏரி அமைக்க, மக்கள் பல ஆண்டாக விடுத்த கோரிக்கையால், முதல்வர் பழனிசாமி, 26.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். பொன்னாளியம்மன் நீரோடை குறுக்கே, 105 ஏக்கரில், 446 ஏக்கர் பாசன வசதி பெற, ஏரி அமைக்கப்படுகிறது. இதற்கு, 85 பேர் தங்கள் நிலங்களை வழங்க முன் வந்துள்ளனர். அதில் ஆறு பேர், தங்கள் முழு நிலங்களையும் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். விழாவுக்கு தலைமை வகித்த, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேசியதாவது: பொன்னாளியம்மன் நீரோடை குறுக்கே, தலா மூன்று லட்சம் ரூபாயில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைத்து தரப்படும். மேட்டூர் அணை உபரி நீரை, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டசபை தொகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளில் நீர் நிரப்ப, குழு அமைத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அப்பணி துரிதமாக நடப்பதால், விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE