சேலம்: கொரோனா வார்டு செவிலியர்களுக்கு, ஜன., 1 முதல், உணவு, தங்குமிடம் நிறுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்தனர்.
சேலம், அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில், நேற்றைய நிலவரப்படி, 180 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில், 75 பேருக்கு தொற்று உறுதியாகி, தனியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வார்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ஒரு வாரம் பணி, அடுத்த ஒரு வாரம் தனிமை என, 14 நாளுக்கு, உணவு, தங்குமிடம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், வீட்டுக்கு செல்வதை தவிர்த்து, நோய் பரவலை தடுக்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று காலை பணிக்கு சென்ற செவிலியர்களிடம், இனி, தங்குமிடம், உணவு கிடையாது. வீட்டில் இருந்து பணிக்கு வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், மதியம், 1:30 மணிக்கு, ஆர்.எம்.ஓ., அலுவலகம் முன் திரண்டு, பின் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, டீன் பாலாஜிநாதன் கூறுகையில், ''உணவு, தங்குமிடம், வரும், 31 வரை மட்டும்தான். பின், தமிழகம் முழுதும் நிறுத்தப்படுகிறது. இத்தகவல், மூன்று நாளுக்கு முன் தெரிவிக்கப்பட்டதை ஏற்காமல், செவிலியர்கள் முறையிட்டதால், கலெக்டர் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவர் அறிவுரைப்படி, கோரிக்கை மனு பெற்று, மாவட்ட நிர்வாகம் மூலம், மாற்று ஏற்பாடு செய்ய, பரிசீலனை நடக்கிறது,'' என்றார். செவிலியர்கள் கூறுகையில், 'கொரோனா வார்டு நிரந்தரமாக மூடும் வரை, உணவு, தங்குமிடம் வேண்டும். இல்லையெனில், கொரோனா பணியை புறக்கணிப்போம்' என, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE