பெங்களூரு: பிரிட்டனில் பரவியுள்ள, புதிய வகை கொரோனா வைரஸ், பெங்களூரைச் சேர்ந்த, 6 வயது சிறுமி உட்பட, மூன்று பேருக்கு பரவியுள்ளது. இதையடுத்து, அவர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இது நகர மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் பரவியுள்ள, உருமாற்றம் அடைந்த, புதிய வகை கொரோனா வைரஸ், கர்நாடகாவில் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதற்காக, கடந்த நவ., 25 முதல், பிரிட்டனிலிருந்து கர்நாடகா திரும்பிய, 2,500க்கும் அதிகமானவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இதில், 300க்கும் அதிகமானோர் எங்குள்ளனர் என்ற தகவல், இதுவரை சுகாதார துறைக்கு தெரியவில்லை.பரிசோதனைபிரிட்டனிலிருந்து திரும்பிய, 2,127க்கும் அதிகமானோரை கண்டுபிடித்து, 1,766 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 27 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களின் எச்சில் மாதிரிகள், பெங்களூரு, 'நிமான்ஸ்' மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
அதில், பெங்களூரை சேர்ந்த மூவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டது. பிரிட்டனிலிருந்து, கடந்த, 18ல் திரும்பிய, ஜே.பி.நகர் வசந்தபுராவில் உள்ள, ஸ்ரீசாய் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், 34 வயது பெண், அவரது, 6 வயது மகள் அடங்குவர். மேலும், பெண்ணின் கணவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அது புதிய வகை வைரசா என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அந்த அடுக்குமாடி குடியிருப்பில், 35 பேர் வசிக்கின்றனர். இவர்கள் முதன்மை தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அனைவரையும் அரசு கண்காணிப்பில் இருக்கும் வகையில், ஓட்டலுக்கு அழைத்து செல்ல, சுகாதார துறை முடிவு செய்தது.
அடம்
இதற்காக அங்கு சென்ற அதிகாரிகளிடம், 'நாங்கள் இங்கேயே தனிமையில் இருக்கிறோம். வெளியே செல்ல மாட்டோம்' என்று அடம்பிடித்தனர். இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகராட்சி ஊழியர்கள், 'சீல்' வைத்தனர்.மேலும், யாரும் வெளியே வர முடியாத வகையில், இரண்டு போலீஸ் ஏட்டுகள் போடப்பட்டுள்ளனர். உணவு பொருட்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் 'ஆன்லைனில்' முன்பதிவு செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றால், 14 நாட்கள் வரை, சீல் வைத்திருக்கப்படும்.மேலும், பொம்மனஹள்ளி மண்டலத்தை சேர்ந்த மற்றொருவருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்கும் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடும் பணி நடக்கிறது.
சிகிச்சை
இது குறித்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது: பிரிட்டனிலிருந்து வந்தவர்களில் தாய், மகள், மற்.ொறருறாரு நபருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. யாரும் பயப்பட தேவையில்லை.அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகியுள்ளதால், தொற்றை எதிர்கொள்ள முடியும். எனவே ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை. திட்டமிட்டபடி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE