புதுடில்லி: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மறுநாள் (ஜன.,01) புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றால், கொரோனா பரவல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று (டிச.,30) முதல் ஜன.,01 வரை மாநிலங்களில் நிலவும் சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கலாம் எனவும், சூழலைப் பொறுத்து இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முயலுங்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கட்டுப்பாடு
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
* சென்னையிலுள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் மதுபான விடுதிகளை டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணியுடன் மூட வேண்டும்.
* சென்னையிலுள்ள அனைத்து உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதியில்லை.
* சென்னை மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து கடற்கரை சாலைகளும் இரவு 10 மணிக்கு மூடப்படும்.
* சென்னையிலுள்ள மேம்பாலங்கள் அனைத்தும் நள்ளிரவில் மூடப்படும்.
* சென்னை மாநகரத்தில் சுமார் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
இவ்வாறு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE