
வழக்கமாக வருடம் முடியும் போது இப்போதுதான் பிறந்தது போல இருக்கிறதே அதற்குள் ஒரு வருடமாகிவிட்டதா? என்றுதான் நினைப்போம், ஆனால் இந்த 2020 ம் வருடம், மார்ச்சிற்கு பிறகு மெதுவாக மிக மெதுவாகவே நகர்ந்தது. எப்போதடா இந்த ஆண்டிற்கு விடை கொடுப்போம் என்ற மனநிலையை எல்லோருக்கும் உருவாக்கிவிட்டது.

ஒரு வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எது என நினைத்துப் பார்த்தால் பல சம்பவங்கள் மனதில் ஒடும் ஆனால் 2020 ம் ஆண்டை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு என்ற ஒரே சம்பவம் மட்டுமே நினைவிற்கு வரும்,வருகிறது.

கால்களில் செருப்பு கூட இல்லாமல் பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் துாரத்தை குடும்பம் குடும்பமாக கும்பல் கும்பலாக நடந்து கடந்த கொடுமை.

மகனை நோய் தின்று கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் இ-பாஸ் இல்லாததால் போய் பார்க்க முடியாத சோகத்துடன் ரோட்டில் உட்கார்ந்து பெருங்குரலெடுத்து அழுத தந்தை

பஸ்சுக்கு கொடுக்கக்கூட காசு இல்லாத நிலையில் கால் பாதித்த தன் தந்தையை ஒரு ஒட்டை சைக்கிளில் வைத்து ஆயிரத்திற்கும் அதிகமான கிலோமீட்டர் துாரம் ஒட்டிவந்த மகள்

எல்லா உடமைகளையும் விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று கிடைத்த லாரி,பஸ்,ரயில்களில் சொந்த ஊருக்கு அடித்துப்பிடித்து சென்ற மக்கள்

சொந்த ஊரே என்றாலும் உள்ளே வராதே கொரோனாவை பரப்பாதே என்று சொந்த பந்தங்களே ஊருக்கு வெளியே விரட்டிவிட்ட அவலம்
இருந்த கூலி வேலையை இழந்து ஒரு வாழைபழத்திற்கும் ஒரு வேளை சோற்றுக்கும் அலை பாய்ந்த ஜனங்கள், அன்னதானம் வழங்கும் இடத்தில் வைக்க தட்டு இல்லாமல் மகளையே ஜடப்பொருளாக்கி வைத்த தாய்
பொறியாளர்களும் பேராசிரியர்களும் போன்ற உயர்வகுப்பு மக்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்திற்காக தெருவில் காய்கறி விற்ற கொடுமை
சீராட்டி பாராட்டி வளர்த்த தாயானாலும் முகத்தை பார்க்கவிடாமல் எரியூட்டிய கொடுமை
எரியூட்டிய பின் மிஞ்சிய சாம்பலில் கூட கொரோனா கலந்திருக்கலாம் என அஸ்தி கலயத்தைக்கூட வாங்க வராத உறவுகள்
என்று கொரோனா மக்களின் மனதை, வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது. அது கொடுத்த நன்மை என்று பார்த்தால் கைகழுவுதல் உடல் சுத்தம் பேணுதல் ஆடம்பரத்தை தவிர்த்தல் ஆரோக்கிய உணவு எடுத்துக் கொள்ளல் எளிமையாக வாழ்தல் போன்ற விஷயங்கள் மட்டுமே
கொரோனாவால் பெற்றது அற்பமே இழந்ததுதான் அதிகம்
வாழ்க்கையில் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை என்று புலம்பியவர்களை வாழும் வாழ்க்கையே பெரிது என்று உணர்த்தியது கொரோனாதான்.
ஒரு சுனாமி, ஒரு நிலநடுக்கம், ஒரு வெள்ளம் இதெல்லாம் ஒரு சில நாளில் சரி செய்துவிடலாம் ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு படிப்பை, வேலையை, தொழிலை மகிழ்ச்சியை காவு வாங்கிய, வாங்கிக் கொண்டு இருக்கும் கொரோனாவிற்கு நாம் மனஉறுதியுன் இருந்து விடை கொடுப்போம் இல்லையில்லை விரட்டியடிப்போம்.
-எல்.முருகராஜ்