மேற்கு வங்கத்தின் மருமகன்!
'திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை சமாளிப்பது, சிரமமான வேலையாகத் தான் இருக்கும் போலிருக்கிறது' என, எரிச்சலுடன் கூறுகிறார், பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா. மேற்கு வங்கத்தில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. 'இந்த முறை, எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும்' என்ற நோக்கத்தில், பா.ஜ., தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, சமீபத்தில் மேற்கு வங்கத்துக்கு வந்தபோது, திரிணமுல் கட்சியினர், அவர் மீது தாக்குதல் நடத்தினர்; இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்னை குறித்து விளக்கம் அளித்த மம்தா, 'மேற்கு வங்க மாநிலத்துக்கு சற்றும் தொடர்பில்லாத நட்டா போன்ற, வேறு மாநிலத்தவர், இங்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்' என, குற்றச்சாட்டை துாக்கி வீசினார்.
இது, நட்டாவை டென்ஷனாக்கி விட்டது. 'இந்திய அரசியலில், இதுவரை கேள்விப்படாத குற்றச்சாட்டை கூறுகிறாரே' என, புலம்பிய நட்டா, வேறு வியூகத்தை நாட வேண்டியதாகி விட்டது. நட்டாவின் மனைவி மல்லிகாவின் தாய், அதாவது, நட்டாவின் மாமியார் ஜெயஸ்ரீ பானர்ஜி, மேற்கு வங்கத்தை பூர்வீகமாக உடையவர்; முன்னாள் எம்.பி.,யும் கூட. இந்த விவகாரத்தை கையில் எடுத்த நட்டா ஆதரவாளர்கள், 'எங்கள் தலைவர், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் இல்லை. மேற்கு வங்க மாநிலத்தின் மருமகன். மம்தாவின் குற்றச்சாட்டு, எங்கள் தலைவரிடம் எடுபடாது' என கூறி, சமாளித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE