உழைப்பே பெருமையாக பேச வைக்கிறது!
ஐந்து ஆண்டுகளுக்கு முன், சாதாரண இல்லத்தரசியாக இருந்த நிலையில், இப்போது, மாதம், 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும், உணவக தொழில் நிர்வாகியாக வளர்ந்துள்ளது பற்றி, கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபரம் ஒன்றியம், முனையனுாரைச் சேர்ந்த அன்பு: திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகி விட்டன. கணவர் மோகன்தாஸ், பேருந்துகள் வைத்து பிசினஸ் செய்கிறார். நான், பி.காம்., படித்துள்ளேன். துவக்கத்தில் கணவருக்கு தேவையான உதவிகளை செய்தபடியும், குழந்தைகள் இருவரை கவனித்தபடியும், வீட்டில் தான் இருந்தேன். குழந்தைகள் பெரியவர்களாக ஆன பின், தொழில் செய்யலாமே என எண்ணினேன்.பத்தாண்டுகளுக்கு முன், என் கணவர், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார். அதில் பல அனுபவங்கள் கிடைத்தன. ஐந்தாண்டுகளுக்கு முன், கணவரிடம், 'திருச்சி - கரூர் வழித்தடத்தில் நல்ல ஓட்டல் இல்லை. அங்கு ஓட்டல் ஆரம்பிக்கலாமா...' என கேட்டேன். அவரும், 'ஓகே' சொன்னார்.துவக்கத்தில் ஸ்நாக்ஸ், முறுக்கு போன்ற தின்பண்டங்களை மட்டுமே விற்றோம். ஆறு மாதங்கள் வரை, கடை பக்கம் யாரும் வரவில்லை; தொடர்ந்து நஷ்டம் தான்.
அதன் பின், அதை சிறிய உணவகமாக மாற்றலாமே என யோசித்து, அதற்கான பாத்திரங்கள், கருவிகள் போன்றவற்றை வாங்கி, சிறிய அளவில் தான் துவக்கினேன்.விறகு அடுப்பு சமையல், விதவிதமான உணவுகள், ஆர்கானிக் அரிசியை பயன்படுத்தி சாதம், நாட்டு பால் பண்ணை பாலில் தயாரான டீ, காபி, சுத்தமான கடலை எண்ணெய் பயன்பாடு, ருசியான உணவு பக்குவம், முழுவதும் பெண்களால் இயக்கப்படும் ஓட்டல் என, பல வகையாக எங்கள் உணவகத்திற்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகிறது.
எட்டு மாதங்களுக்கு பிறகு தான், கொஞ்சம் லாபம் வரத் துவங்கியது.அதன் பின், தொழிலை மேலும் விருத்தி செய்து, இப்போது, பெரிய அளவில் உணவகம் வளர்ந்து உள்ளது. இதற்காக வாங்கியிருந்த, 25 லட்ச ரூபாய் கடனை, இரண்டாண்டுகளுக்கு முன்பே அடைத்து விட்டேன். இப்போது எல்லா செலவுகளும் போக, மாதம், 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.துவக்கத்தில், நான் உணவகம் துவக்கிய போது, 'பெண்ணான உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. கணவர் சம்பாதிப்பது போதாதா; அழகாக வீட்டில் இருந்து, வாழ்க்கையை ரசிக்கலாமே...' என, நண்பர்கள், உறவினர்கள் திட்டினர்.இப்போது நாங்கள் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்த பிறகு, 'நீ பெரிய அளவில் வெற்றி பெறுவாய் என்பதை, நாங்கள் அப்போதே அறிவோம்' என்கின்றனர்.
இங்கே, வெற்றி பெறுபவர்களுக்குத் தான் மதிப்பு, மரியாதை எல்லாம். உழைப்பால் அது தான் எனக்கும் கிடைத்துள்ளது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE