புதுடில்லி:கடற்படையில், குறுகிய கால பணி திட்டத்தில் இருந்து நிரந்தர பணி கோரியுள்ள, 10 பெண் அதிகாரிகளை, பணியில் இருந்து விடுவிக்க, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
எஸ்.எஸ்.சி., எனப்படும், குறுகிய கால பணி திட்டத்தில், ராணுவத்தில் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரிகளை, நிரந்தர பணியாளர்களாக நியமிக்குமாறு, கடந்த பிப்ரவரியில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 'ராணுவத்தில், ஆண்களுக்கு இணையாக, பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்' என, அந்த உத்தரவில் குறிப்பிட்டது.
இந்நிலையில், கடற்படையில் குறுகியகால பணி திட்டத்தில் உள்ள பெண் அதிகாரிகளையும் நிரந்தரமாக்க, கடந்த மார்ச்சில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இதற்கான பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.இதற்கிடையே, குறுகியகால பணி திட்டத்தின் கீழ், இன்றுடன் பணி ஓய்வு பெறும், 10 பெண் கடற்படை அதிகாரிகள், தங்களுக்கு நிரந்தர பணி அளிக்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதிகள், இந்திரா பானர்ஜி, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்,விசாரணைக்கு வந்தது.அப்போது, 10 பெண் அதிகாரிகள் இன்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், வழக்கு விசாரணையை, அடுத்த மாதம், 19க்கு ஒத்தி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE