சிவகங்கை: ''தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. தமிழக வாக்காளர்களில் 3 கோடியே 90 லட்சம் பேர் மகளிர். 3 கோடியே ஒரு லட்சம் பேர் ஆண்கள். மகளிர் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வர முடியும். வீட்டுக்காரருக்கு புத்தி கூறினால் மாற்றம் வந்துவிடும்'' என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் பேசினார்.
சிவகங்கை தனியார் திருமண மண்டபத்தில் பெண்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
''ஏழ்மையில் இருந்தால் தான் உங்களை விலைக்கு வாங்க முடியும் என்பதால் ஏழ்மையை பொத்தி பாதுகாக்கின்றனர். ஏழ்மை தான் உங்களை கைநீட்ட வைக்கிறது. அதனால் தான் வறுமைக்கோட்டுக்கு மேல் என்ற நிலையில்லாமல் செழுமை கோட்டுக்கு மேல் கொண்டு வர நாங்கள் நினைக்கிறோம். பெண்களுக்கு சம்பளம் உட்பட அனைத்திலும் சம உரிமை வேண்டும். லஞ்ச பட்டியல் வெளியிட்டேன் அதில் கூட பெண் குழந்தைக்கு குறைவாக வாங்குகின்றனர். அங்கும் சமநிலை இல்லை. உங்கள் கணவர், மகனை மாற்றுங்கள். கட்சியில் சேர்க்க வேண்டாம். ஓட்டுச்சாவடிக்கு கொண்டு வந்தால் போதும். நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு வருவோம்.
நரகம், சொர்க்கம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் நரகம் ஒன்று உண்டென்றால் அது அரசு மருத்துவமனை. அங்கு சென்றால் மீண்டு வருவதே கஷ்டம். அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை இவர்கள் ஒதுக்கிவிட்டார்கள். இப்படி கொள்ளையடித்த பணத்தில் இரண்டு தமிழகத்தை வளமாக வைக்க முடியும்.
ஒரு காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்றோம். நாங்கள் அதனை மாற்றி கொள்ளையனே வெளியேறு என்கிறோம். தற்போது இருப்பவர்கள் சீட்டை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இருக்கையில் மக்கள் உட்கார வைக்கவில்லை. அவர்களை வழியனுப்புவோம். நீங்கள் நினைத்தால் மாற்ற முடியும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே'' என்றார்.
மணிக்கணக்கில் காத்திருப்பு நிமிடத்தில் முடிந்து போச்சு
முன்னதாக சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் காலை 11:30 மணிக்கு கமல் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பழைய பஸ் ஸ்டாண்டில் காலை 11:00 மணி முதல் மக்கள் காத்திருந்தனர். 2 மணி நேர தாமதத்திற்கு பின் மதியம் 1:35 மணிக்கு வந்த கமல் வேனில் நின்றபடி ஒன்றரை நிமிடம் மட்டும் பேசினார். உள்ளூர் நிர்வாகிகள் சிலர் மட்டும் என்பதால் வெளியூர் நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்தனர். தி.மு.க, காங்., நிர்வாகிகளும் கமல் பேச்சைக் கேட்க காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE