ஊரடங்கால் பல மாதங்களாக முடங்கிய மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். எல்லா வகையிலும் நன்மை தரும் என்ற நம்பிக்கையோடு, 2021 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை, மக்கள் எளிமையாக கொண்டாட்டத்துடன் வரவேற்கின்றனர்.
ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டின் போதும், சென்னை, மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை எல்லாம் களை கட்டும். நள்ளிரவில் வாகனங்கள் ஒளி, சப்தம் உமிழ்ந்தபடி சீறிப்பாயும். நடுரோட்டில், 'கேக்' வெட்டி கொண்டாட்டம்; வாண வேடிக்கை நடக்கும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நலச்சங்கத்தினர் கலை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வர்.
ஆனால், இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் மக்களை பாடாய் படுத்தி விட்டது. பல மாதங்களாக முடங்கிய மக்கள், தற்போது தான், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இறை வழிபாடு சிறப்பு
வரும் புத்தாண்டு, கொரோனா நீங்கிய ஆண்டாக அமையும்; எல்லா வகையிலும் நன்மை தரும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், எளிமையாக வரவேற்க, மக்கள் ஒரு வாரமாகவே தயாராகினர்.சில நாட்களாக, பிராட்வே, மாம்பலம், மயிலாப்பூர், நங்கநல்லுார், தாம்பரம் உள்ளிட்ட வர்த்தக பகுதிகளில், மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.குறிப்பாக, காலண்டர், டைரி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது. ஏராளமான பேக்கரிகளில் கேக்குகளை மக்கள், 'ஆர்டர்' செய்தனர்.
சிறிய பரிசுப் பொருட்கள் கடைகளிலும், கணிசமான கூட்டம் காணப்பட்டது.பலர் தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள, வாழ்த்து அட்டைகளும் வாங்கினர்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில, 'ரிசார்ட்'களிலும் இரவு, 'உற்சாக' பானத்துடன், டின்னர், நள்ளிரவு கேக் வெட்டுதல் என, நண்பர்களுடன் மகிழும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான முன்பதிவுகள் நடந்தன.
சென்னை, புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடுகள் நடந்தன. ஆங்கிலப் புத்தாண்டின் போதும், கோவில்களில் நள்ளிரவு நடை திறப்பு கிடையாது. ஆனால், காலையில் மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவழிபாடு நடத்துவது வழக்கம் என்பதால், பிரசித்தி பெற்ற கோவில்களில் முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை, புறநகரில் உள்ள, 'கேட்டட் கம்யூனிட்டி' வாசிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நகர்களைச் சேர்ந்த நலச்சங்கத்தினர் புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு போட்டிகளை அறிவித்து நடத்தினர். புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு ஆடல் பாடலுடன், கேக் வெட்டி கொண்டாட்டம் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பெரிய அளவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாவிட்டாலும், தங்கள் ஏரியாக்களில் எளிமையான முறையில் கொண்டாட, ஏற்பாடுகள் செய்துள்ளனர்.ஆனால், ஆங்கிலப் புத்தாண்டு என்பது தமிழருக்கு பெரிய விஷயம் இல்லை.
சென்னை போன்ற நகரில் மேலை நாட்டு கலாசாரம் அதிகரித்து விட்டதால், ஆங்கில புத்தாண்டிற்கு, மவுசு அதிகரித்து விட்டது.தமிழர், தமிழ் என, ஓட்டுக்காக மட்டும் கூவிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் கூட, இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆங்கிலப் புத்தாண்டு எளிமையாக கொண்டாடப்படுவதிலும், ஒரு நன்மை உண்டு; கொரோனா தொற்று மேலும் குறையும்; சில மாதங்களில், கொரோனா தொற்று நீங்கி, சுகாதார மேம்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வர உள்ள தமிழ் புத்தாண்டை, தமிழர்கள் அனைவரும், எப்போதும் இல்லாத வகையில், சிறப்பாக கொண்டாட வேண்டும். வரும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம், ஆண்டுதோறும் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஆங்கில புத்தாண்டு பிறந்த வரலாறு தெரியுமா
உலகம் முழுதும் உள்ள மக்களால் கொண்டாடப்படும் நாள் ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை மட்டும் தான் மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் மனப்பூர்வமாக மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்கிறோம். அன்று ஒரு நாள் மட்டும், மற்றவர்கள் தவறு செய்தால், தாராளமாக மன்னிக்கும் குணம் நமக்கு வந்து விடும்.சரி... சரி... சப்ஜெக்டுக்கு வருவோம்...
நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில் தான் உலகிலேயே முதன்முதலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இந்திய நேரப்படி, டிச., 31 மாலை, 4:30 மணிக்கு அங்கு புத்தாண்டு பிறந்துவிடுமாம். அதற்கு அடுத்து தான் ஆஸ்திரேலியாவில் மாலை, 6:30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.ஆங்கிலப் புத்தாண்டை பொறுத்தவரை, பட்டாசுகளை வெடித்தும், வாண வேடிக்கைகளை நிகழ்த்தியும் மக்கள் வரவேற்கின்றனர். இனிப்புகளைப் பரிமாறியும், பூக்களை வழங்கியும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நினைவில் நிறுத்தப்படுகின்றன.இங்கு, சிறார்கள் நள்ளிரவில், 'கேக்' வெட்டி கொண்டாடுவர்; பல இளைஞர்கள், யுவதிகள், 'லைட்'டான மது போதையில், பைக், கார்களில் இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 2:00 மணி வரை நகர்களை சுற்றி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வர்.திருமணமாகி விட்டால், மனைவியை எப்படியாவது ஓரம் கட்டி, நண்பர்களுடன், புத்தாண்டு பிறப்பை, 'பேச்சுலர்' பார்ட்டி வைத்து கொண்டாட கிளம்பி விடுவர்.ஐம்பது வயதை கடந்து, ஆட்டம் ஓயும் நிலையில், 'கிருஷ்ணா, ராமா, கோவிந்தா...' என கோவில்களுக்கு விஜயம் செய்து பக்திமானாக ஜொலிப்பர். இதுதான் இங்குள்ள ஆங்கிலப் புத்தாண்டின் அதிகபட்ச கொண்டாட்டம்.சரி, இந்த ஆங்கிலப் புத்தாண்டிற்கு ஒரு சுவாரசியமான வரலாறு உண்டு தெரியுமா? அது என்னவென்று கொஞ்சம் பார்க்கலாம்!
மார்ச், 1ல் கொண்டாட்டம்
ஆங்கிலப் புத்தாண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வந்தாலும், ஆரம்பத்தில், ஜன., 1ல் புத்தாண்டாக கொண்டாடப்படவில்லை. ஏனென்றால், அக்காலகட்டத்தில் ரோமானிய காலண்டரில், 10 மாதங்கள் மட்டுமே இருந்தன.மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதமே, முதல் மாதமாக கருதப்பட்டது. அதனால், மார்ச், 1ல் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.அதன் பின், ரோமானிய மன்னரான போம்பிலியஸ், ஆண்டில் இரண்டு மாதங்களைச் சேர்த்து, 12 மாதங்களாக்கினர். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் மாதங்கள் சேர்க்கப்பட்டன.ஜூலியன் காலண்டர்புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில் தான், ஜன., 1ம் தேதிஆங்கிலப்புத்தாண்டாக,அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜூலியன் காலண்டர்
உலகம் முழுதும், பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக, ரோமானியர்களும் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தனர்.இதனிடையே, கிறிஸ்து பிறந்த டிச., 25ஐ, புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அந்நாட்டு மக்கள், டிச., 25ஐ, புத்தாண்டாக கொண்டாடத் துவங்கினர்.லீப் ஆண்டு உருவாக்கம்இப்படி ஒரு குழப்பம் நீடித்து வந்த நிலையில், கடைசியாக கி.பி., 1500களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி, புதிய காலண்டரை வடிவமைத்தார்.இதைத் தொடர்ந்து, கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்றும் நாம் பின்பற்றி, புத்தாண்டைக் கொண்டாடி வருகிறோம்.
புத்தாண்டில் சபதம்!
நமக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு புத்தாண்டிலும், ஏதேனும் சபதம் ஏற்கும் பழக்கம் தான். அது இன்றோ, நேற்றோ துவங்கியதில்லை. ஆதிகாலத்தில் இருந்தே வழக்கமாக இருந்திருக்கிறது.பாபிலோனியர்கள் ஒவ்வொரு புத்தாண்டிலும், 'பழைய கடன்களை அடைப்போம்; கடன் வாங்கிய பொருட்களைத் திருப்பித் தருவோம்' என்று சபதம் ஏற்பராம்.நாமும் அதுபோல, பல புத்தாண்டில் எத்தனையோ சபதங்களை ஏற்றிருப்போம். அவற்றை சிரத்தையுடன், சில நாட்கள், மாதங்கள் முயற்சித்து, கைவிட்டு விடுவது வாடிக்கைதான்.ஆனால், இந்தப் புத்தாண்டில் இருந்தாவது, எடுத்த சபதத்தை நிறைவேற்றுவோம். அதற்கு ஒரு சிறந்த வழி உண்டு. அதாவது, இந்த புத்தாண்டில் இருந்து எந்த சபதமும் எடுக்க மாட்டேன் என்றாவது சபதம் எடுப்போம் சரியா... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தகங்களுடன் கொண்டாடுவோம்
நம்மைப் பற்றி, நம்மை சுற்றி இருப்பவர்கள் பற்றி, சமூகம் பற்றி, உலகம் பற்றி, நம்மை நிறைய சிந்திக்க வைத்தவர், மிஸ்டர் 2020. இவர், உலகை மாற்றிப் போட்டவர். இவர் பதவிக்கு வந்தது முதல், உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இவர், இன்று நள்ளிரவுடன் ஓய்வுபெறுகிறார்.அவர் செல்லும்போது, தன் ஆட்சி காலத்தில் பரிசோதனை முயற்சியாக பரிசீலித்த நோய், பசி, துக்கம், இயலாமை, வறுமை, கல்லாமை என, பல்வேறு செயல்பாடுகளை தன்னுடன் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.அதேநேரம், இவற்றிலிருந்து புது உலகைப் படைக்கத் தேவையான செயல்திட்டங்களையும், புதிய எண்ணங்களையும் வடிவமைத்து, புதிதாக பதவியேற்கும் 'மாண்புமிகு 2021'க்கு இடம் வழங்க திட்டமிட்டுள்ளார்.இதுவரை, நமக்கு பல்வேறு அனுபவப் பாடங்களை கற்பித்து விடைபெறும் மாண்புமிகு, மிஸ்டர் 2020ஐ வழியனுப்புவோம். புதிதாக பதவியேற்கும் மாண்புமிகு, 2021ஐ, அன்புடனும், ஆசையுடனும் வரவேற்போம். ஏற்கனவே, நாட்காட்டி, நாள்குறிப்பேடு என, பல்வேறு பொருட்களுடன், 2021ஐ வரவேற்கத் தயாராய் இருப்பீர்கள்.அத்துடன், அறிவுப்பசிக்கும், குதுாகலமாக இரை தேடலாம் இன்று. எங்கு…
தமிழ் ஸ்டுடியோ
அதாவது, 'செங்காந்தள் புத்தக நிலையம், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழநி, பியூர் சினிமா புத்தக அங்காடி உள்புறம்' என்ற முகவரியில், கொஞ்சம் இரை தேடலாம்.ஆம். இங்கு, இன்று துவங்கி, ஜன., 3 வரை, 10 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு, ரசனைமிகுந்த சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள், அரசியல், கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் விற்கப்படுகின்றன. மற்ற புத்தகக் கடைகளில் கிடைக்காத சினிமா சார்ந்த தொழில்நுட்பம், திரைக்கதை, நடிப்பு, வாழ்க்கை வரலாறு, சினிமா ரசனை, சினிமா பற்றிய கட்டுரைகள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் மற்றும் உலக சினிமா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. இதுமட்டுமல்ல. இன்று, இரவு, 8:00 மணிக்கு, ஷ்யாம் பெனகலின், மன்தன் என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. அது முடிந்ததும், இயக்குனர் கோபி நயினாருடன் உரையாட களம் அமைத்து தருகிறது, தமிழ் ஸ்டுடியோ.
ரசனை நிகழ்வு
'மகாலட்சுமி பிளாட்ஸ், அன்பு நகர், 4வது தெரு, வளசரவாக்கம், சென்னை - 95' என்ற முகவரியில் இயங்கி வரும், பாலு மகேந்திரா நுாலகத்திலும், ஒரு ரசனையான நிகழ்வு நடக்க உள்ளது. இன்று மாலை, 6:00 மணியில் இருந்து நள்ளிரவு வரை, இந்த நிகழ்வுகள் நடக்கும். அதாவது, மாலை, 6:30 மணிக்கு, எழுத்தாளரும், இயக்குனருமான தங்கர்பச்சான், வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார்.அவர்களுக்குப் பின், தமிழ் சினிமாவின் சிறந்த, 10 திரைப்படங்கள் குறித்து, நுாலக வாசகர்கள் கலந்துரையாடுகின்றனர். 9:00 மணிக்கு, இயக்குனர் கேபிள் சங்கரின், 'வெப் சீரீஸ்களில் - வெந்ததும் வேகாததும்' திரையிடப்படுகிறது.அதைத் தொடர்ந்து, கொரிய இயக்குனர், 'கிம் கி டுக்'குக்கு, எழுத்தாளர் எம்.சிவகுமார் புகழஞ்சலி செலுத்துகிறார். நிறைவாக, தாமஸ் வின்டர் பெர்க் இயக்கிய, அனதர் ரவுண்டு டர்க் 2019 என்ற திரைப்படம் திரையிடப்படும்.
கே.கே.நகரில்...
சென்னை, கே.கே.நகர், பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் உள்ள, டிஸ்கவரி புக் பேலசிலும், இன்று மாலை, 6:00 மணிக்கு, கவிஞர் நா.முத்துகுமாரின், 11 நுால்கள் வெளியிடப்படுகின்றன. அதில், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், தமிழ் இலக்கியங்கள் குறித்தும், தமிழ் இலக்கிய படைப்புச் சூழல் குறித்தும், வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார். சிறந்த கேள்விகள் கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வாசகர்களுக்கு, பரிசளிப்பு விழாவும் உண்டு. அத்துடன், இங்குள்ள நுால்களுக்கு, 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, 'சென்னை, தேனாம்பேட்டை, 7, இளங்கோ சாலை' என்ற முகவரியில் இயங்கிவரும், பாரதி புத்தகாலயத்தில், பிரபலமான எழுத்தாளர்கள், வாசகர்களை சந்திக்கின்றனர்.அத்துடன், பாரதி புத்தகாலயம் மற்றும் குழந்தைகளுக்கான தமிழ் பதிப்பகமாக, 'புக் பார் சில்ட்ரன்' ஆகியவற்றின் அனைத்து வெளியீடுகளும், 50 சதவீத தள்ளுபடியில், நள்ளிரவு வரை விற்கப்படுகின்றன. இதுபோல, பல்வேறு பதிப்பகங்கள் புத்தாண்டை, வாசகர்களுடனும் புத்தகங்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளன. வரவேற்போம், நாமும், 2021ஐ, ஆத்மார்த்தமான அன்போடும், புரிதலோடும்... புன்னகையோடும், சமாதானத்தோடும். அவர் நமக்கு நன்மைகளையும் வெற்றிகளையும் பரிசளிப்பார் என்ற நம்பிக்கையுடன்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
-- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE