வழக்கமாக, கூட்டணி பேச்சு முடித்து, தொகுதி பங்கீட்டையும் ஏற்படுத்தி, தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும், அ.தி.மு.க., - தி.முக., கட்சிகள், இந்த முறை முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டன. இதனால், இரு கட்சிகளின் கூட்டணிக் கட்சிகள் மிரண்டு போயுள்ளன.
முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் நடந்த தேர்தலில், கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு உடன்பாடு முடிந்த பின், தமிழகம் முழுதும், தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது, அவர்களின் வழக்கம். இருவரின் மறைவுக்கு பின், தங்களை ஆளுமை மிக்க தலைவராக நிரூபிக்க வேண்டிய நெருக்கடி, முதல்வர் இ.பி.எஸ்.,க்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., சார்பில், 'வெற்றி நடை போடும் தமிழகம்' எனற கோஷத்துடன், தன் பிரசாரத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் நாமக்கல்லில் துவக்கினார். அ.தி.மு.க., அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி, முதல்வர் இ.பி.எஸ்., ஓட்டு சேகரித்தபோது, மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. முதல்வரை பார்க்கவும், அவரிடம் கைகுலுக்கவும் பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், குழந்தைகள் என, அனைத்து தரப்பினரும் முண்டியடித்தனர். முதல்வர் என்ற பந்தா இல்லாமல், தொண்டர் ஒருவர் வீட்டில், முதல்வர் இ.பி.எஸ், தேனீர் அருந்தியது, அவரது பிரசாரத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
முதல்வர் இ.பி.எஸ்., பிரசாரத்தின்போது, 'மக்களைத் தான் முதல்வராக பார்க்கிறேன்' என பேசும்போது, அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதாவுக்கு ஆரவாரம் செய்தது போல ஆமோதித்தனர். மேலும், பொங்கல் பரிசாக, 2,500 ரூபாய் அறிவித்தது, பொது மக்களிடம், ஆட்சியின் செல்வாக்கை உயர்த்தி உள்ளது.
அதேபோல், 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில், இணையதள தேர்தல் பிரசார கூட்டத்தையும், 'அ.தி.மு.க.,வை அகற்றுவோம்' என்ற தலைப்பில், மக்கள் கிராம சபை கூட்டங்களையும், தி.மு.க., நடத்தி வருகிறது.ஸ்டாலின் பங்கேற்கும், மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு திரளாக கூட்டம் வருகிறது. அதேபோல், மகளிர் அணி செயலர் கனிமொழி, இளைஞரணி செயலர் உதயநிதி உட்பட, 20 முன்னோடிகள் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டமும் களைகட்டி வருகிறது. பொங்கலுக்கு பின், கொங்கு மண்டலத்தில் தேர்தல் அறிக்கை வெளிட்டு, ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளார்.
ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், தங்கள் அணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சு நடத்தாமல், தொகுதி பங்கீடு உடன்பாடு காணாமல், போட்டி போட்டு பிரசாரம் மேற்கொள்கின்றன. இதனால், இந்த இரு கட்சிகளின் அணிகளில் உள்ள கட்சிகள், தங்களுக்கு எதிர்பார்க்கிற தொகுதி பங்கீடு கிடைக்குமா என, மிரண்டு போய் காணப்படுவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE