வாசகர்ளே... உங்களின் கருத்துகளைப் படித்தபோது, உங்கள் அனைவருக்குமே
திராவிட கட்சிகள் மீது கோபம் இருப்பது தெரிகிறது; வரக் கூடிய அரசு, உங்களை
ஏமாற்றாமல் செயல்பட்டால் மட்டுமே, உங்களின் கோபத்திலிருந்து தப்ப முடியும்
என்பதும் புரிகிறது. லஞ்சம் தான் முதல் எதிரி. அதை வேரறுக்கவில்லை எனில்,
தமிழகத்தைத் திருத்தவே முடியாது. திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, நில
அபகரிப்பு, ரவுடியிசம், அராஜகம் என, உங்கள் நிம்மதியைக் கெடுக்கும்
பட்டியல் நீண்டுவிடும்.மேலும், உங்கள் கையில் தான் முதல்வர் யார் என்பதைச்
சுட்டிக் காட்டும் கோல் இருக்கிறது. அந்தக் கோலை சரியாகப் பயன்படுத்தி,
எதிர்காலத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வாழ்த்துகள் வாசகர்களே!
- ஆசிரியர்
நவோதயா பள்ளிகள் மாவட்டத்திற்கு ஒன்று வேண்டும். உண்டு உறைவிட பள்ளியும், மாவட்டத்திற்கு ஒன்று வேண்டும்.
- பி.முருகேசன், கோவை.
அரசின், 100 நாள் வேலை திட்டத்தில், 'ஓபி' அடிக்கும் பழக்கம் தான் அதிகம் இருக்கிறது; இந்த திட்டத்தை நீக்க வேண்டும் அல்லது அதில் சேருவோர் விவசாய வேலைக்குத் திரும்ப வேண்டும். பிளாஸ்டிக் புழக்கத்தை நிறுத்த வேண்டும்.
- ஜெயலட்சுமி சுப்பாராவ், மதுரை.
தரமான சாலைகள், தெருவுக்கும் வேண்டும்.
- ஆர்.பிரபுதாரிணி
சுங்க சாவடி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். முதலில் அறிவித்தபடி புதிய சாலைகளில் ஆரம்ப ஆண்டுகளில் வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாக குறைக்கப்பட்டு, பின், பராமரிப்புக்கென மட்டும், குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
- ஜி.ஆனந்த் ராஜ்
நீதித் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் அனைத்தும் ஒழிந்தாலே, நாடு பாதி சரியாகி விடும். நடக்குமா?
ஜே.வி.ராஜ்
அரசு அலுவலகப் பணிகள் அனைத்தும் வௌிப்படைத் தன்மையுடன் நடக்க வேண்டும். புரோக்கர்கள் யாரும், அரசு அலுவலகம் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவே கூடாது.
- க.அழகிய நம்பி, செம்பாக்கம், சென்னை.
பொதுச் சுவர்களிலும், மேம்பாலங்களிலும், நடைபாதைகளிலும், தனியார் இல்லச் சுவர்களிலும், எழுதப்படும் அல்லது ஒட்டப்படும் சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள், கண்டிப்பாக தடை செய்யப்பட்ட வேண்டும். மேலும், அனைத்துப் பேருந்து நிலையங்களிலும், கழிப்பறை சுத்தமாகவும், மக்கள் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.
- வி.எஸ்.கோபாலன், மதுரை.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட வேண்டும். மேலும் மக்கள் விண்ணப்பித்த நாளில் இருந்து 48 மணி நேரத்திற்குள் அதன் பதில் மக்களுக்கு சென்றடைய வேண்டும். வணிக வரித்துறை நிலுவையில் உள்ள அனைத்தும் விரைவில் முடிக்கப்பட வேண்டும்.ஊழலைக் குறைக்க முதல்வரின் நேரடி கண்காணிப்பில் ஒரு தனி அமைச்சகம் இயங்க வேண்டும். இதில் மக்கள் தைரியமாக புகார்களை கூர் வழிவகை செய்ய வேண்டும்.
அன்னிய முதலீட்டை ஈர்க்கும் பொருட்டு பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி அதிக அன்னிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வர வழிவகை செய்ய வேண்டும்.வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டும் டாஸ்மாக் இயங்க, அதாவது சனி மற்றும் ஞாயிறு மட்டும் இயங்க வழிவகை செய்ய வேண்டும்.
- வே.பாலசுப்ரமணியன், கூடுவாஞ்சேரி.
மருத்துவமனைகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வேண்டும்; தரமான, மலிவான விலையில் சிகிச்சை கிடைக்க வேண்டும். கொரோனா தாக்கி, தனியார் மருத்துவமனையில் சேர்த்து, 10 லட்சம் ரூபாய் செலவழித்தும், என் தந்தையை மீட்க முடியவில்லை.
- காளிராஜன், ஊர் பெயர் இல்லை.
அரசுக்கு நாம் கட்ட வேண்டிய அனைத்து வரிகளும், 'ஆன்லைனில்' செலுத்தும் வசதி வேண்டும்; காகித கரன்சி பரிமாற்றமே இல்லாத நிலை உருவானால் லஞ்சத்தை தவிர்க்கலாம். அரசு ஊழியர்களும், 'சிசிடிவி' மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.
- கே.ஆர்.பாலகிருஷ்ணன், சென்னை.
உப்பு சப்பில்லாத விஷயங்களுக்குப் போராட்டம் நடத்துவோரை, குறைந்தபட்சம், 15 நாட்களுக்கு 'கம்பி' எண்ண வைக்க வேண்டும்.
- ஸ்ரீநிவாசன், செங்கல்பட்டு.
கோவை மாநகரில் குடிநீர் வினியோகம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் அவர்கள் மக்களை சுடுவார்கள் இது மிக கொடுமையான செயல்.
- ஆறுமுக நாகராஜன், கோவை.
கோவில்களில் வி.வி.ஐ.பி., மற்றும் வி.ஐ.பி., தரிசனம் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.- ஸ்வீக்ருதி, ஊர் பெயர் இல்லை.
முதியோர் உயிர்சான்றை 'ஆன்லைனில்' சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.சேதுராமன், ராயப்பேட்டை, சென்னை.
ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் உள்ளன. அவற்றிற்கான காரணங்களையும், அதிலுள்ள அறிவியல் தாத்பரியத்தினையும் அந்தந்த மதவழிபாட்டு தலங்களில் துண்டு பிரசுரங்களின் மூலமாகவோ அல்லது சித்திரங்கள்,சுவரொட்டிகளின் மூலமாகவோ வழிபட வருபவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.-
பா.வசீகரன், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
ஊடகங்களில் வெளிப்படையாக தரமற்ற கருத்துகளை பதிபவர், ஓர் அரசியல் கட்சியை சார்ந்தவராகவோ அல்லது சுயவிளம்பர வாதியாகவோ தான் இருப்பர். பல சிறந்த கருத்து பதிவுகளுக்கு பின்னால் முகமற்ற, பெயரற்ற அல்லது புனைப் பெயருடையவர்கள் தான் இங்கு மிக மிக அதிகம். இவர்களின் கருத்துகளை முழுமையாகவும், ஆழமாகவும் ஆராய்ச்சி செய்தால், பதிவிட்டவரின் சிறந்த நிர்வாக திறனை காணலாம். இவர்களை பொதுவெளியில் வெளிப்படையாக கருத்துகளைக் கூற ஊக்குவிக்கும் ஓர் அரசு தான் மக்களின் இன்றைய தேவை.
- வரி செலுத்தும் மூடன்
விவசாயத் துறையில் பெரிய தில்லுமுல்லு நடக்கிறது. முளைப்பு திறன் இல்லாத விதை சப்ளை, மரபணு மாற்றப்பட்ட விதை விநியோகம், ரசாயன பூச்சிக் கொல்லி பயன்பாடு, இடைத்தரகர்கள் தொல்லை என ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கின்றன. சீர் செய்யணும்; 'சிஸ்டம்' சரியில்லை.
- ஆர்.சுரேஷ், நெய்வேலி
ஒருவர் பிறந்தாலோ, இறந்தாலோ அதற்குரிய சான்று, உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்.
- டே.கிருபாகரன், கள்ளிக்குடி சத்திரம்.
ஓட்டை ஒழுகல் இல்லாத பஸ், தரமான ரேஷன் பொருட்கள் தேவை.
- ஹரி, திருப்பூர்.
மக்களுக்குப் பணம் கொடுக்கத் தயாராகி நிற்கும் கட்சிகளை, தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது? மக்களிடம் லஞ்ச மனப்பான்மை ஒழிந்து, ஜனநாயக மாளிகையின் அஸ்திவாரமான நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாய், தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.'தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவேன்; சீவக்கட்டையாக மாற்றுவேன்' என்ற, 'கப்சா' வாக்குறுதிகளைக் குடுக்காதீர்கள்; மக்களுக்கு நியாயமானதை, நேர்மையாகச் செய்யுங்கள்.
- வி.பி.முருகானந்தன், திருப்பூர்.
ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கிவிட்டால் 'ஆதார்' அட்டையை வைத்தே, அவரின் பிள்ளைகளும் அரசு வேலைக்கு லாயக்கற்றவர்கள் என கருதப்பட்டு, அரசு போட்டித் தேர்வுகளுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் நிலையிலேயே நிராகரிக்கப்பட வேண்டும். இதை இந்தியா முழுவதும் செயல்படுத்தி பார்க்கலாம். எந்த அரசு சாட்டையை சுழற்றுமோ?
- கவின், ஊர் பெயர் இல்லை.
லஞ்சப் பேர்வழிகள் சொத்துக்களை, பறிமுதல் செய்தவுடன் அரசுக்கு அவற்றைச் சேர்க்க வேண்டும். கோர்ட், கேஸ் என இழுத்தடித்து, அந்த சொத்து யாருக்கும் பயன்படாமல் இருக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
- பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
அரசு கட்டடங்கள் பத்தாண்டுகளில் பழுதானால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பொறுப்பேற்று மீண்டும் இலவசமாய் மராமத்து பணி செய்ய வேண்டும்.
- மணி, திருப்பூர்.
நம் பாரம்பரிய மருத்துவத்தின் மகிமை உலகெங்கும் பரவி விட்டது. மாவட்டத்திற்கு இரண்டு சித்தா மருத்துவமனையைத் துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ்குமார், நெய்வேலி
மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட, ஏதாவது ஐடியா செய்யக் கூடாதா?
- ராகவேந்திரன், பெங்களூரு
தன் தொகுதியின் நிறையென்ன குறையென்ன என்பதை அந்த தொகுதி மக்களோடு தங்கி கலந்து ஆலோசித்து பணி செய்தாலே ஐந்து சிங்கப்பூர் ஆறு அமெரிக்கா அளவிற்கு வளர்ந்திருக்கும். அதைவிடுத்து வென்றதும் தலைமறைவாவதும் தலைநகரிலே தங்கிவிடுவதுமான நிலை மாறவேண்டும். ஏதோ ஒரு ஊரில் உட்கார்ந்தபடி 'அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன்' என்பது வெட்டிவேலை. வாக்குறுதி என்பதே வடிகட்டிய பொய் ஏமாற்று வேலை என்பது காலம் கற்றுத்தந்த பாடம்.
- கு.நாகராஜ், சக்கம்பட்டி, தேனி மாவட்டம்.
மக்களுக்கு இலவசங்களைக் கொடுத்துக் கொடுத்து, கையேந்த விடாதீர்கள்.
ஆர்.எஸ்.மனோகர், தாம்பரம், சென்னை.
பிச்சைக்காரர்களே இல்லா தமிழகம் கிடைக்குமா?
- யோகீஸ்வரி, மதுரை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE