பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே அப்பநாயக்கன் பாளையத்தில், உலக நலன் வேண்டி அரச மரம் மற்றும் வேப்ப மரத்துக்கு, சடங்குகளுடன் திருமணம் நடந்தது.
துடியலூர் அருகே அப்பநாயக்கன் பாளையம் கிராமத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. கோவில் தல விருட்சமாக அரச மரமும், வேப்ப மரமும் உள்ளன. இங்கு உலக நலன் வேண்டி, இக்கோவிலில் உள்ள அரச மரத்தை ஆண் கடவுளாகவும், வேப்பமரத்தை பெண் கடவுளாகவும் பாவித்து, திருமணம் செய்து வைப்பது என, கிராம மக்கள் முடிவு செய்தனர். இதில், கிராம மக்கள், அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அரச மரத்துக்கு பட்டு வேஷ்டி, பட்டு துண்டும், வேப்ப மரத்திற்கு பட்டு புடவையும் எடுத்து மரங்களைச் சுற்றி உடுத்தி, மலர் மாலைகள் அணிவித்தனர்.புரோகிதர்கள், யாக குண்டம் வளர்த்து, வேத மந்திரங்கள் ஓதி, திருமண நிகழ்ச்சியை நடத்தினர். மூன்று தம்பதிகள் கன்னிகா தானம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து, திருமணத்துக்கு வந்திருந்த அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்று, மூன்று பெண்கள் இணைந்து, இரண்டு மரங்களை தாலியால் சுற்றி, மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டினர்.அனைத்து திருமண சடங்குகளும் நடந்தன. திருமணத்திற்கு வந்து இருந்த பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE