நாகப்பட்டினம்:கொட்டிய மழையில், பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டாலும், 'ஆய்வு வெறும் கண்துடைப்பு' என, விவசாயிகள் கூறினர்.
நாகை மாவட்டத்தில், 'புரெவி' புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கன மழையில், 2 லட்சம் ஏக்கரில் நெல் பயிர்கள், 1,500 ஏக்கரில் தோட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் அசுதோஸ் அக்னிஹோத்ரி தலைமையிலான எட்டு பேர் குழுவினர் நேற்று நாகை வந்தனர்.
இரவு முதல் மழை கொட்டிய நிலையில், நாகை மாவட்டம் கருங்கண்ணி, வடக்கு பனையூர் ஆகிய இடங்களில், அழுகிய நெல் பயிர்களை, குடை பிடித்தப்படியே ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.மத்திய குழுவினரிடம் பேசிய விவசாயிகள், 'மழையால் அழுகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்' என்றனர்.கலெக்டர் பிரவின் நாயர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், ''மத்திய குழு வருகையை விவசாயிகளுக்கு, வேளாண் துறையினர் தெரிவிக்கவில்லை. மாவட்டம் முழுதும் லட்சக்கணக்கான ஏக்கரில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.''ஆனால், நாகையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில், இரு இடங்களில், சில நிமிடங்கள் ஆய்வு செய்யும் வகையில், வேளாண் துறையினர் பயண திட்டம் தயார் செய்துள்ளனர். மத்திய குழுவின் ஆய்வு வெறும் கண்துடைப்புக்காக நடந்துள்ளது,'' என்றார்.
ஹிந்தியில் பேசிய விவசாயிகள்
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் அருகே பெரியக்கோட்டையில் கண்ணன் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால், 12 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்ட நடவு பயிர்களை, மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.அப்போது, பாதிப்புக்குள்ளான நெற்பயிரை, விவசாயிகள் மத்திய குழுவினரிடம் காட்டினர். 'ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். எனவே, அரசு இழப்பீடு வழங்கினால் பேருதவியாக இருக்கும்' என ஹிந்தியில் பேசி, பாதிப்புகளை புரிய வைத்தனர்.
விவசாயிகள் ஹிந்தியில் பேசியதால், எவ்வளவு மழை பெய்தது, நீலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள்ளது என்பது போன்ற விபரங்களை, மத்திய குழுவினர் கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உப்பூர், கோவிலுார் உள்ளிட்ட கிராமங்களிலும், ஆய்வு நடந்தது.
வேகத் தடையால் விபத்து
பெரியகோட்டையில் ஆய்வை முடித்து, மத்திய குழு சென்ற வாகனத்தை, பின்தொடர்ந்து வந்த நெடுஞ்சாலைத் துறை வாகன டிரைவர், வேகத்தடை இருந்ததால், திடீரென, 'பிரேக்' பிடித்தார். பின்னால், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வேன், நெடுஞ்சாலைத் துறை வாகனத்தின் மீது மோதியது. போலீஸ் வேனுக்கு பின் வந்த, இரண்டு பொதுப்பணித் துறை வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இதில், ஒரு போலீஸ்காரர் உட்பட இருவர் காயம் அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE