சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், சொர்ணாபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி திருவாபரண அலங்காரத்தில், ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை, 3:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி, வீதியுலா முடிந்து, ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளினர்.
இதையடுத்து, 5:00 மணிக்கு, சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜர், ஆனந்த தாண்டவ நடனமாடியவாறு, சித்சபை பிரவேசம் செய்ய, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர்.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சாவூர் பெரிய கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான், தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். திருவாதிரை நட்சத்திர தினமான நேற்று, ஐம்பொன்னாலான நடராஜ பெருமானுக்கு, 22 வகையான பொருட்களில், சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இலவச தரிசனம் அனுமதி மறுப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை
மங்களநாதர் - மங்களநாயகி கோவிலில், நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
மரகத நடராஜருக்கு சந்தன காப்பு களைதல், புதிய சந்தன காப்பு அலங்காரம்
நடந்தது.கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து, வெளிநாட்டு பக்தர்களுக்கு அனுமதி
மறுக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்காக, 250, 100 மற்றும், 10 ரூபாய்
கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் வருகை குறைவால், இலவச தரிசனம்
நிறுத்தப்பட்டு, அனைவரும், 10 ரூபாய் கட்டணத்தில்
அனுமதிக்கப்பட்டனர்.கூட்டம் இல்லாத நிலையிலும், இலவச தரிசனத்திற்கு
அனுமதிக்காமல், கட்டணம் வசூலித்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.தேவஸ்தான
சமஸ்தான திவான் பழனிவேல் ராஜன் கூறுகையில், ''இலவச தரிசனம்
அனுமதிக்கப்பட்டது. ரத்து செய்யப்படவில்லை. இது குறித்து
விசாரிக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE