திருப்பூர்:கணவர் கண்முன், மனைவியை கொலை செய்து, நகைகளுடன் தப்பிய, ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 66; பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி, 60. தம்பதியின் மகனுக்கு, திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், குடும்பத்தினர் மனவேதனையில் இருந்தனர். இதையறிந்த, வெள்ளகோவில், திருவள்ளுவர் நகரில் ஆட்டோ ஓட்டி வரும் சக்திவேல், 35, என்பவர், குழந்தை வரம் கிடைக்க பரிகாரம் செய்யலாம் என, ஆறுமுகத்திடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய அவர், பூஜைக்கு சம்மதித்தார். நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், அவரது கடையில், பூஜை நடத்திய சக்திவேல், தம்பதியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில், ஈஸ்வரி இறந்தார். ஆறுமுகம் மயக்கம் அடைந்ததால், கடையை பூட்டி, நகை, பணத்துடன் சக்திவேல் தப்பினார். காலை, 7:30 மணியளவில் சத்தம் கேட்டு, பக்கத்து கடைக்காரர்கள் பூட்டை உடைத்து திறந்ததில், ஈஸ்வரி இறந்து கிடந்ததும், ஆறுமுகம் உயிருக்கு போராடியதும் தெரிந்தது.
அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கூறுகையில், 'பரிகார பூஜை செய்வதாக கூறிய சக்திவேல், இருவரையும் கடுமையாக தாக்கி, ஈஸ்வரி கழுத்தில் இருந்த, 5 சவரன் நகை, கடையில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றார். 'தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE