மதுரை : அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் பணியாற்றும் டாக்டர், நர்ஸ் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கிய தனிமை அறை, உணவு, பாதுகாப்பு வசதிகளை தொடர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவிட்டது.
மதுரை கீழப்பனங்காடி வழக்கறிஞர் பாலாஜி தாக்கல் செய்த பொதுநல மனு:தற்போது கொரோனா தொற்று புதிய வடிவில் உருவெடுத்து அச்சுறுத்துகிறது. அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் இதர மருத்துவ ஊழியர்கள் பணி முடிந்தும், அவர்களது வீடுகளுக்குச் செல்லுமாறு டிச.,20 முதல் அறிவுறுத்தப்பட்டது. இதனால் அவர்களது வீடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.கொரோனா வார்டுகளில் பணிபுரிவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. அவர்கள் தங்க தனிமை முகாம், உணவு வசதி அளிக்க போதிய நிதி இல்லை எனக்கூறி அரசு புறக்கணிப்பது துரதிஷ்டவசமானது. அவர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றுகின்றனர்.கொரோனா வார்டுகளில் பணிபுரியும் டாக்டர், நர்ஸ் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் தங்க தனிமை அறைகள், உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்துததர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாலாஜி குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் அமர்வு: கொரோனா வார்டுகளில் பணியாற்றும் டாக்டர், நர்ஸ் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களுக்கு தனிமை அறை, உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகளை இரண்டு வாரங்களுக்கு தொடர இடைக்கால உத்தரவிடப்படுகிறது. மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள், மதுரை கலெக்டர், மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE