திருப்பூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் ஜல்லிக்கட்டு 'டி-சர்ட்' தயாரிப்புக்கு ஆர்டர் இல்லாததால், திருப்பூர் பின்னலாடை துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூரில் இயங்கும் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, தீபாவளி, பொங்கல் உட்பட பண்டிகை காலம் முக்கியமானதாக உள்ளது. இக்காலங்களில், நாடு முழுதும் உள்ள வர்த்தகர்கள், ஆடை உற்பத்திக்கு அதிகளவு ஆர்டர் வழங்குகின்றனர்.பொங்கல் பண்டிகையில், ஜல்லிக்கட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மாடு பிடி வீரர்கள், போட்டிகளை காணவரும் பார்வையாளர் குழுவினர், ஜல்லிக்கட்டு 'டி-சர்ட்'களை விரும்பி அணிகின்றனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து, ஜல்லிக்கட்டு 'டி-சர்ட்' தயாரிப்பு ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிகளவில் கிடைக்கிறது. காளையின் படம்; மாடு வடிவத்தில், 'ஜல்லிக் கட்டு', 'ஏறு தழுவல்', 'ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு' உட்பட பல வகையான வாசகங்கள் பொறிக்கப்பட்ட 'டி-சர்ட்' அதிகளவில் தயாரிக்கப்படும்.
வரும் ஜன., 14ல் தைப்பொங்கல், 15ல் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. பண்டிகை நெருங்கும் நிலையில், திருப்பூர் நிறுவனங்களுக்கு, இன்னும், ஜல்லிக்கட்டு 'டி-சர்ட்' தயாரிப்பு ஆர்டர்கள் கிடைக்கவில்லை.ஆடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:ஜல்லிக்கட்டு 'டி-சர்ட்' தயாரிப்பு ஆர்டர்கள், திருப்பூர் பகுதி குறு, சிறு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, பொங்கல் பண்டிகை காலத்தில், சிறந்த வர்த்தக வாய்ப்பை உருவாக்கி தருகிறது.
கொரோனா பரவல்; குறைந்த பார்வையாளரே பங்கேற்க முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை, சோர்வடைய செய்துள்ளது. இதன் எதிரொலியாக, திருப்பூர் நிறுவனங்களுக்கு, இந்தாண்டு, ஜல்லிக் கட்டு 'டி-சர்ட்' தயாரிப்புக்கு ஆர்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பொங்கல் நெருங்கும் நிலையில், எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும், இன்னும் ஜல்லிக்கட்டு 'டி-சர்ட்' தயாரிப்புக்கு, ஆர்டர் வரவில்லை. இனி, ஆர்டர் கிடைக்குமா என்பதும் சந்தேகம். தீபாவளி, கிறிஸ்துமஸை தொடர்ந்து, பொங்கல் பண்டிகை ஆடை வர்த்தகமும் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE