வாஷிங்டன்:மரபணு உருமாற்றம் அடைந்துள்ள, புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு, அமெரிக்காவில் தென்படத் துவங்கியுள்ளது. வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளாதவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு இறுதியில், சீனாவில் இருந்து பரவத் துவங்கிய, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போதுதான், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே இந்த தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில், மரபணு உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது.
இது, நெதர்லாந்து, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கு பரவியுள்ளது. 'பழைய கொரோனாவை விட, மரபணு உருமாற்றமடைந்துள்ள புதிய கொரோனா, மிகவும் வேகமாக பரவக் கூடியது' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவையை, பல நாடுகள் ரத்து செய்துள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின், டென்வர் நகரை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியைச் சேர்ந்த, 20 வயது வாலிபருக்கு, புதிய மரபணு உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தனிமைபடுத்தப்பட்டு, அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
வெளிநாட்டு பயணம் ஏதும் மேற்கொள்ளாத நிலையில், அவருக்கு புதிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அரசு நிர்வாகம் கலக்கம் அடைந்துள்ளது.'சில மாதங்களுக்கு முன்பாகவே, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு புதிய வகை தொற்று ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் மூலம், இந்த நபருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம்' என, டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.
அதன்படி பார்க்கையில், அமெரிக்காவில், புதிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்கனவே பல இடங்களுக்கு பரவியிருக்கக் கூடும் என கருதப்படுகின்றது. இதையடுத்து, பரிசோதனை முறைகளை தீவிரப்படுத்த, பல்வேறு மாகாணங்கள் உத்தரவிட்டுள்ளன.ஜோ பைடன் அதிருப்திகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 3.36 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், புதிய மரபணு உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பும் தென்பட துவங்கியுள்ளது. தடுப்பூசி வழங்கும் பணியும் மந்தமாக நடந்து வருகின்றது.இதற்கு, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஜோ பைடன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 'நாம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்கள் மிகவும் கடினமான ஒன்று. இந்த நேரத்தில், அரசு நிர்வாகம், தடுப்பூசி வழங்குவதில் மிகவும் மெத்தமானமாக நடந்து கொள்கிறது. நிலைமை மிகவும் மோசமடையும் சூழ்நிலையை உருவாக்காதீர்கள்' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE