கோவை : பள்ளிகள் மூடியிருக்கும் சூழலில், மாணவர்களின் நிலையை அறியவும், பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்தும் வகையில் அவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கவும், களமிறங்கியுள்ளனர் வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்.
கொரோனா தொற்று காரணமாக, தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. வழக்கமாக பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளுக்கு, தற்போது முழு பாடத்திட்டமும் முடித்து, அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டிருக்கும்.பொங்கல் விடுமுறைக்கு பின், மூன்று திருப்புதல் தேர்வுகளை சந்தித்து, மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதுவர். ஆனால், தற்போது நிலை தலைகீழாக மாறிவிட்டது. ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதால், சிலபஸ் முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் தடுமாறுகின்றனர்.
இந்நிலையில், வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்,'மாணவர்களை தேடி' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், அவர்களின் விலாசம் அடிப்படையில், ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மாணவர்களின் கிராமத்திற்கு நேரில் சென்று, அவர்களின் பெற்றோரை சந்திப்பதோடு, உயர்கல்வி வாய்ப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கற்றலில் உள்ள நிலை குறித்து அறியும் வகையில், இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, தலைமையாசிரியர் இளமுருகன் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது: எங்கள் பள்ளியில், ஆயிரத்து 32 மாணவர்கள் படிக்கின்றனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட, மனநல ஆலோசனை, உயர்கல்வி கவுன்சிலிங் குழுக்கள் பள்ளியில் செயல்படுகின்றன. இக்குழு ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்களை இணைத்து, வரும் 31 ம் தேதிக்குள், மாணவர்களை நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளோம்.மாணவர்களின் கற்றல் நிலை, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து, அவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பதே எங்கள் நோக்கமாகும்.
கரிச்சிப்பாளையம், வடுகப்பாளையம், கணபதி பாளையம் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் உள்ள 64 மாணவர்களை சந்தித்துள்ளோம். மற்ற மாணவர்களை விரைவில் சந்தித்து, அவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும். இம்முயற்சிக்கு பெற்றோர் அதிகளவில் ஒத்துழைப்பு தருகின்றனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE