பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சி.சி.இ.ஏ., எனப்படும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் ஆலோசனை கூட்டம், நடைபெற்றது.
இதில், மத்திய அரசின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அளித்த சில பரிந்துரைகளுக்கு அந்த குழு ஒப்புதல் அளித்தது.அதன்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணப்பட்டினம் பகுதியில், 2,139 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்பேட்டையை கட்டமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதேபோல், கர்நாடகாவின் துமகூரு பகுதியில், 1,701 கோடி ரூபாய் மதிப்பில், மற்றொரு தொழிற்பேட்டை கட்டமைக்க, ஒப்புதல் வழங்கப்பட்டது.கிருஷ்ணபட்டினத்தில் அமைக்கப்படும் தொழிற்பேட்டை வாயிலாக, 98 ஆயிரம் பேருக்கும், துமகுரு தொழிற்பேட்டை வாயிலாக, 88 ஆயிரம் பேருக்கும் வேலைகள் கிடைக்கும் என, கூறப்படுகிறது.
இதைத் தவிர, உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில், 3,883 கோடி ரூபாய் மதிப்பில், எம்.எம்.எல்.எச்., எனப்படும், பன்முக தளவாட மையம் மற்றும் எம்.எம்.டி.எச்., எனப்படும் பன்முக போக்குவரத்து மையத்தையும் அமைக்க, அனுமதி வழங்கப்பட்டது.இந்த திட்டங்களை தவிர, 3,044 கோடி ரூபாய் மதிப்பில், ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE