பொது செய்தி

தமிழ்நாடு

மீட்டுத்தர வேண்டும்

Added : டிச 31, 2020
Share
Advertisement
கோயிலுக்கு போகும் நிலை தொடரணும் வங்கி ஊழியராக இருப்பதால் கடந்தாண்டு எல்லோரின் பொருளாதார நிலை மோசமானதை நேரிடையாக பார்த்தேன். லோன் கட்ட முடியாமல் பரிதவிக்கும் நிலை இனிமேல் வரக்கூடாது. அவரவர் குடும்பத்தை அவரவர் பார்த்துக் கொள்ளும் நிலை வரவேண்டும். மூன்றாண்டுகளாக செவ்வாயன்று நரசிங்கம் பெருமாள் கோயிலுக்கு சென்று பூக்கள் அர்ச்சனை செய்து வந்தேன். இப்போது பூக்கள்

கோயிலுக்கு போகும் நிலை தொடரணும்

வங்கி ஊழியராக இருப்பதால் கடந்தாண்டு எல்லோரின் பொருளாதார நிலை மோசமானதை நேரிடையாக பார்த்தேன். லோன் கட்ட முடியாமல் பரிதவிக்கும் நிலை இனிமேல் வரக்கூடாது. அவரவர் குடும்பத்தை அவரவர் பார்த்துக் கொள்ளும் நிலை வரவேண்டும். மூன்றாண்டுகளாக செவ்வாயன்று நரசிங்கம் பெருமாள் கோயிலுக்கு சென்று பூக்கள் அர்ச்சனை செய்து வந்தேன். இப்போது பூக்கள் கொடுத்தாலும் வாங்குவதில்லை. மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரிக்கு கோலம் போட முடியவில்லை. இந்தாண்டில் நிம்மதியாக கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கோலம் போடவேண்டும்.பிரியங்கா, வங்கி ஊழியர், கே.கே.நகர்.

ஐரோப்பிய சுற்றுலா செல்ல வேண்டும்

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தோம். கொரோனாவால் ஆசை நிராசையாகி விட்டது. இப்போதைய ஒரே ஆசை எல்லோரும் இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும். பொருளாதாரம் சீராக வேண்டும். மீண்டும் கொரோனா அலை பரவாமல் மக்கள் நிம்மதியாக உலகம் சுற்றி சம்பாதிக்க வேண்டும். இந்தாண்டிலாவது ஐரோப்பிய சுற்றுலா செல்ல வேண்டும்.அழகுமீனா, தனியார் நிறுவனம், அழகப்பன் நகர்.

சவால்களை எதிர்கொள்வோம்

கொரோனா இல்லை என்று நினைத்து பலர் மாஸ்க் கூட அணியாமல் இருப்பதை தவிர்த்தால் தான் 2021 பாதுகாப்பான ஆண்டாக இருக்கும். மாஸ்க், சமூக இடைவெளி, கிருமிநாசினியில் கைகளை சுத்தம் செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தவுள்ளேன். தொழிலில்களில் உள்ள சவால்களை எதிர் கொள்ள அனைத்து தொழில் துறையினரும் ஒன்றிணைய வேண்டும். தமிழகம் நோக்கி பல தொழில் நிறுவனங்கள் வருவதற்கு தயாராக உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவவேண்டும். மதுரை செல்லுார் பந்தல்குடி கால்வாயை சீரமைத்து, அங்குள்ள மக்களுக்கு குப்பை, கழிவுநீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்திட்டம் உள்ளது.பூர்ணிமா வெங்கடேஷ், தலைவர், யங் இந்தியன்ஸ், திருநகர்

ஆரோக்கியத்தை வரவேற்போம்

2021 ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வரவேற்க வேண்டியது அவசியம் தான். ஆனால் இன்னும் கொரோனா நீடிப்பதால் நம் பாதுகாப்பை உறுதி செய்து ஆரோக்கியத்தை வரவேற்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால் கல்வி, தொழில், கலை என பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதித்துள்ளது. புத்தாண்டில் அனைத்து துறைகளும் முன்னேற்ற பாதையில் பயணிக்க கடவுளை மனமுருகி வேண்ட வேண்டும். நான் கல்வி துறையில் இருப்பதால் பேராசிரியர், மாணவர்களுக்கு இடையிலானநல்லுறவு மேம்பட என்னால் முடிந்தளவிற்குமுயற்சி செய்வேன் என்பதை புத்தாண்டு சபதமாக உறுதி ஏற்றுள்ளேன்.ஆர்.ஜெயப்பிரதா, உதவி பேராசிரியை, பழங்காநத்தம்.

இயற்கையை போற்றுவோம்

எத்தனையோ கனவுகளை எதிர்பார்த்த 2020 கொரோனா தொற்றால் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஆனால் இயற்கையை சீண்டியதன் விளைவை இந்த தலைமுறையினரை சந்திக்கவும் வைத்தது. பல படிப்பினைகளையும் மனித குலத்திற்கு கொரோனா தொற்று தந்துள்ளது. இனியாவது இயற்கையை போற்றும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும். பள்ளிக்கு செல்வதை தவிர்த்து மாணவர்களுக்கு ஆன்லைனில் கற்பித்தது, வீட்டிலிருந்து பணிபுரிந்தது என 2020 வித்தியாசமான ஆண்டாகவும் அமைந்தது. குடும்பத்தினருடன் வீட்டில் இருக்கும் வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சி. வரும் 2021 ஆண்டு இந்த பெருந்தொற்றிலிருந்து மனிதகுலத்தை விடுவிப்பதாக அமைய வேண்டும். பொருளாதார சரிவிலிருந்து நம் நாடு மட்டுமின்றி நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மீண்டு வர புத்தாண்டு வழிவகைகள் செய்ய வேண்டும். புத்தாண்டில் எல்லோரும் எல்லாமும் பெற அன்னை மீனாட்சி அருள்புரிய வேண்டும்.ஆர்.பிரவீணா, ஆசிரியை, சொக்கலிங்கநகர்


நல் அரசு அமைய வேண்டும்

உலகை புரட்டி போட்ட கொரோனா வைரஸால் 2020 ஆண்டை வாழ்வில் நினைவு கூறத்தக்கதாக அமைந்து விட்டது. பல மாதங்களாக உலகமே முடங்கிய நிலையிலும் இந்தியா அதிலிருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் புத்தாண்டு நாட்டை வல்லரசாக்குவதாக அமைய வேண்டும். தமிழகத்தில் சட்டசபை தேர்தல்கள் மே மாதம் நடக்கவுள்ளன. தேர்தலில் எல்லா தரப்பினரும் ஓட்டுக்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் நல் அரசு அமைய புத்தாண்டு உதவ வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் அரசு அமைந்தால் தமிழகத்திற்கு மேலும் பல திட்டங்களை கொண்டு வர முடியும். தொழில் துறை தேக்க நிலையிலிருந்து விடுபட்டு வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க வாய்ப்புகளை ஆங்கில புத்தாண்டு ஏற்படுத்திட வேண்டும்.ராஜசேகரன், ஜவுளி ஏற்றுமதியாளர், நேருநகர்

அமைதி, வளம், வளர்ச்சி தருமா

2020 ஆண்டு குறித்து யாரிடமும்கேட்டாலும் மறக்க முடியாதது என கூறுவர். அந்தளவுக்கு உலகிலுள்ள ஒவ்வொருவரும் கொரோனா பேரிடரால் பெரும் துன்பத்திற்குள்ளாகி விட்டனர். குழந்தைகள், கணவர் மற்றும் உறவினர்களை குடும்பத்தலைவிகள் நன்றாக பார்த்து கொண்டதில் கடந்த ஆண்டை செலவழித்திருப்பர். வரும் புத்தாண்டு நோய் நொடிகள் இல்லாத அமைதியான பூமியை உருவாக்குவதாக அமைய வேண்டும். வளம், வளர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அப்படிபட்ட விவசாயிகள், விவசாயம் செழிந்தோங்க புத்தாண்டு துணை புரிய வேண்டும்.மகாராணி, குடும்பத்தலைவி, ஆண்டாள்புரம்


மீண்டு வரும் ஆண்டு

பலவித அனுபவங்களைத் தந்து நம்மை முடக்கிப்போட்ட 2020 ஐ எப்படியோ கடந்து வந்து விட்டோம். 2021 ல் தமிழகம் பொதுத் தேர்தல் உட்பட பல சவால்களை எதிர்நோக்கியே இருக்கிறது. கொரோனா முடக்கத்தால் வேலை, தொழிலை இழந்து தவிக்கும் பல நடுத்தர வர்க்க மக்களும் மீண்டுவருகிற ஆண்டாக 2021 இருக்க வேண்டும். முக்கியமாக கூண்டுக்கிளிகளாய் குழந்தைகளை வீட்டுக்குள் முடக்கிப்போட்ட கொரோனா கதவடைப்புகள் நீங்கி பிள்ளைகள் பள்ளி நண்பர்களோடு இணைகிற வாய்ப்பை 2021 வழங்க வேண்டும். அவர்களுக்கு அலைபேசிகளிலிருந்து விடுதலை தர வேண்டும். மனிதர்களுக்குள் கொரோனாவால் ஏற்பட்ட இடைவெளி குறைய வேண்டும்.லட்சுமி கோபிநாதன், வழக்கறிஞர், புதுார்

புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்

கடந்தாண்டை யாருமே வாழ்வில் மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக முதியவர்கள் 2020 ல் நிறைய கஷ்டங்களை சந்திக்க நேரிட்டது. அவர்களுக்கு அத்தகைய இன்னல்கள் இல்லாததாக ஆங்கில புத்தாண்டு அமைய வேண்டும். ஊரடங்கால் குடும்பத்தினர் வீட்டிற்குள்ளே முடங்க நேரிட்டது. இதனால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தன. அந்நிலை புத்தாண்டில் மாற வேண்டும். மேலும் மரபணு மாற்றப்பட்ட பிரிட்டன் கொரோனா வைரஸ் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறிள்ளனர். அதையும் உலகம் எதிர்கொண்டு மீள புத்தாண்டு வழிவகைகள் செய்ய வேண்டும். இந்த புத்தாண்டில் முன்பு போல இயற்கை சூழலில் மக்கள் வாழ கடவுள் அருள வேண்டுகிறேன்.சசூன் அனிதா, பேராசிரியை, நேருநகர்.

அமைதி, ஆரோக்கிய ஆண்டாக மலரட்டும்

உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்த 2020ம் ஆண்டு விடை பெற்றது என்பதே மனதுக்குள் ஒருவித நிம்மதி கிடைக்கிறது. நோய்த் தொற்றால் உயிர்ப் பலி, சிகிச்சை கிடைக்காமல் மனிதர்கள் தவித்தது உள்ளிட்ட பல சோதனைகளை கடந்து லாக்டவுன் மூலம் பல அனுபவங்களை பெற்றுள்ளோம். குறிப்பாக ஒரு டெக்னாலஜி வாழ்க்கையை அனுபவிக்க துவங்கியுள்ளோம். வீட்டில் இருந்து பணியாற்றுவது, செயலி வழியில் மீட்டிங் நடத்துவது, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள், நேர்காணல்கள் என இன்னும் பல விஷயங்களை குறிப்பிடலாம். இதை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த புத்தாண்டு உலகளவில் நன்மை, அமைதி, ஆரோக்கியத்தை தரும் வகையில் அமைய வேண்டும்.முத்து, ஆராய்ச்சி மாணவி, நாகமலைபுதுக்கோட்ட

ை'சக்சஸ் பார்முலா'வை அமைப்போம்

கொரோனா தாக்கத்தால் 2020ல் நம்முடன் பயணித்த பலரை இழந்து விட்டோம். அதுபோல் வரும் ஆண்டு இருக்காது என்ற நம்பிக்கை, பாசிட்டிவ் எண்ணத்துடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்போம். இந்தாண்டில் ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பாக நினைத்து வாழ்க்கைக்கு தேவையான பல சுயசபதங்கள் எடுப்போம். குடும்பத்துடன் அதிக நேரங்களை செலவிட திட்டமிட வேண்டும். சேமிப்பு, செலவு செய்வது உள்ளிட்ட பல விஷயங்களுக்கும் திட்டமிட கற்க வேண்டும். ஒவ்வொரு பெண்களும் அந்த குடும்பங்களின் மகாசக்தி. இறைவன் அருள் பெற்று எந்த விஷயங்களுக்காகவும் மனஉடைந்து போய்விடாத சக்சஸ் பார்முலாவை வகுத்துக் கொண்டு வாழ்க்கையில் ஜெயிக்க சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.திவ்யா, தொழில்முனைவோர், பொன்னகரம்.


இறையருள் கிட்டும்; ஆண்டாக வேண்டும்
கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியாக அனைத்து தரப்பு மக்களும் பாதித்துள்ளனர். பல நடுத்தர குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்று விட்டன. அவர்கள் வீறுகொண்டு எழுவதற்கு தேவையான வாய்ப்புகள் கிடைக்கும் ஆண்டாக 2021 அமைய வேண்டும். தொழில் வளர்ச்சி பெருக வேண்டும். உருமாறும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து அனைத்து மக்களும் உடல் ஆரோக்கியத்துடன் வாழத் தேவையான சூழ்நிலைகளை ஆங்கிலப் புத்தாண்டு கொண்டுவர வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் பாசிட்டிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். வன்முறை, மோதல் இல்லாத ஆரோக்கிய சமுதாயம் அமைய இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.ஷானவாஸ் பேகம், காங்., மகளிரணி தலைவி, ஆனையூர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X