கோவை : கோவை வடக்கு நகர நிலவரித்திட்டம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கிரயம்/பூர்வீகம் மூலம் வீடு, மனைகள், விவசாய நிலங்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பட்டா, வடக்கு தனி தாசில்தார் நகர நிலவரித்திட்ட அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:பட்டா என்பது உரிமையை நிர்ணயிக்கும் வருவாய்த்துறை ஆவணமாகும். எனவே, சொத்துக்குரிய ஆவணங்களை ஆஜர்படுத்தி, பட்டா பெறுவதன் மூலம் வருவாய்த்துறை ஆவணங்களில் இன்றைய தேதியில் சொத்துக்குரிய நபரின் பெயர் பதிவு வங்கிக் கடன், மாநகராட்சி சொத்துவரி பெயர் மாற்றம், கிரையம், மற்றும் பாகப்பிரிவினை போன்ற ஆவணங்களின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, வார்டு எண், 'எல்' க்குட்பட்ட பிளாக் 1 முதல் 18 வரையிலான பகுதிகளை சேர்ந்த என்.எஸ்., ராமசாமி ரோடு, தடாகம் ரோடு, ஸ்ரீராம் லே-அவுட், பாரதி பார்க் கிராஸ்கட் ரோடு (1 முதல் 8 வரை) பாரதி பார்க் ரோடு, ராமலிங்கம் சாலை (1 முதல் 5 வரை ) சர்வீஸ் ரிசர்வயர் ரோடு, ராமண்ணா லே அவுட், அழகேசன் சாலை( 1 முதல் 3 வரை ) , ரகுபதி லே-அவுட், பத்மாபுரம் லே-அவுட், ராஜா அண்ணாமலை ரோடு, என்.எஸ்.ஆர்., ரோடு, பாரதியார் கிராஸ் ரோடு, எஸ்.ஆர்.பி., நகர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஏற்கனவே, பட்டா விசாரணைக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கான நோட்டீஸ் பெற்று, இவ்வலுவலகத்தில் ஆஜர் ஆகாத, பட்டாதாரர்கள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள, வடக்கு நகர நலவரித்திட்ட தனி தாசில்தார் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இது, நகர நலவரித்திட்டத்தின் கீழ், பட்டா பெற்றுக்கொள்ள இறுதி வாய்ப்பாகும்.
கிரையப்பத்திரம் அசல் மற்றும் நகல், மூலப்பத்திரம் அசல் மற்றும் நகல், வங்கியில் இருப்பின் வங்கி கடிதம், சொத்துவரி, வீட்டுவரி, ரசீது, மின்கட்டண அட்டை நகல், தண்ணீர் வரி ரசிது நகல், வாரிசுதாரரின் இறப்பு சான்று, வாரிசு சான்று, நீதிமன்ற ஆணையிருப்பின் அதன் நகல்/ அசல், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பத்திர தேதியில் இருந்து வில்லங்க நகல் உள்ளிட்ட ஆவணங்களை, 15 தினங்களுக்குள் சமர்ப்பித்து, பட்டா பெற்றுக்கொள்ளாவிடில், நகரளவை பதிவேட்டில் உள்ளவாறு பெயர் தாக்கல் செய்து உத்தரவிடப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE