புதுச்சேரி:புதுச்சேரியில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படாததால், சுற்றுலா பயணியர் திரண்டனர்.கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரி அரசு, கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.புதுச்சேரி, கொண்டாட்டத்திற்கு முழு அளவில் தயாராகியுள்ளது. சுற்றுலா பயணியர் திரண்டு வருகின்றனர். ஓட்டல்களில், 'டிஜே' போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓட்டலில் தங்கி, சமூக இடைவெளியுடன், புத்தாண்டை கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி எல்லைகளில் அனைத்து சுற்றுலா பயணியருக்கும், உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. மதுவிற்கு பெயர் போன புதுச்சேரியில், அதிகாலை, 1:00 மணி வரை பார்களை திறந்து வைக்க, மதுக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில அரசு, நேரத்தை நீட்டிக்கவில்லை.
எனவே வழக்கம்போல், பார்கள் காலை, 8:00 முதல் இரவு, 11:00 மணி வரை திறந்து இருக்கும். சுற்றுலா விடுதிகளில் உள்ள பார்கள், காலை, 8:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை திறந்து இருக்கும்.முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ''பல மாநிலங்களில், புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்யவில்லை. தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரியிலும் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடற்கரையில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, மக்கள் கூடலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE