மதுரை : மதுரை ஆவின் மூத்த தொழிற்சாலை உதவியாளர்கள் தேர்விற்கு எதிரான வழக்கில், 'கீ' பதில்களை வெளியிட்ட பின் தேர்வு தொடர்பான மேல்நடவடிக்கைகளைத் தொடரலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மானகிரி மணிவண்ணன் தாக்கல் செய்த மனு:மதுரை ஆவினில் 30 மூத்த தொழிற்சாலை உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 2019ல் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்விற்கு ஹால்டிக்கெட் வழங்க அழைப்பு வந்தது. இந்நிலையில் எவ்வித அறிவிப்பும் இன்றி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 30 லிருந்து 62 ஆக உயர்த்தி அதற்கு எழுத்துத் தேர்வு நடத்த அக்.,28ல் அழைப்பு விடுக்கப்பட்டது. நவ.,22ல் எழுத்துத் தேர்வு நடந்தது. பங்கேற்றேன்.
தேர்வுக்கான 'கீ' பதில்கள், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகளிலும் விதிகள் மற்றும் வெளிப்படைத் தன்மையை பின்பற்றவில்லை. ரகசியம் காக்கப்படுகிறது. என்னை நேர்காணலுக்கு அழைக்கவில்லை. சட்டவிரோத பணி நியமனத்தை தடுக்க வேண்டும்.தேர்வு நடைமுறை களுக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். 62 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணி நியமன தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மணிவண்ணன் குறிப்பிட்டார்.
நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.அரசுத் தரப்பு, '30 பேருக்கு முதலில் அறிவிப்பு வெளியிட்டதாக கூறுவது ஏற்புடையதல்ல. 62 பேருக்குத்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விதிமீறல் எதுவும் இல்லை,' என தெரிவித்தது.நீதிபதி: 'கீ' பதில்களை வெளியிட்ட பின் தேர்வு தொடர்பான மேல்நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE