பிரஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா இடையே பெரிய முதலீட்டு ஒப்பந்தம் புதனன்று உறுதியானது. இது கட்டடற்ற வர்த்தகத்தை உண்டாக்கும் என சீன அதிபர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியன் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளி. அதே போல் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய யூனியனும் உள்ளது. ஒரு நாளைக்கு இரு நாட்டு வர்த்தகமானது சராசரியாக 100 கோடி பவுண்ட் அளவிற்கு நடக்கிறது. சீனாவின் சந்தையை தங்கள் நிறுவனங்கள் அணுகுவதை அதிகரிக்க ஐரோப்பா முயன்றது. ஆனால் சர்வதேச தொழிலாளர்கள் சட்டங்களை சீனா மதிக்காதது அதற்கு தடையாக இருந்தது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களை கட்டாய தொழிலாலர்களாக்கி பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யப்படுகிறது. இது பற்றி அறிக்கைகள் இரு வாரங்களுக்கு முன் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியிருந்தன. இதனை கண்டித்து ஐரோப்பிய எம்.பி.,க்கள் கண்டன தீர்மானம் நிறைவேற்றிருந்தனர். இந்த சூழலில் தான் ஐரோப்பிய யூனியன் மற்றும் சீனா இடையே முக்கிய முதலீட்டு ஒப்பந்தம் உறுதியாகியிருக்கிறது.

வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த அக்கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜிங் பிங். பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர், “இந்த ஒப்பந்தம் சீன மற்றும் ஐரோப்பிய முதலீடுகளுக்கு பெரிய சந்தைகளையும் சிறந்த வணிகச் சூழலையும் வழங்கும். இந்த ஒப்பந்தம் உலகப் பொருளாதாரத்தைத் ஊக்குவிக்கும். பொருளாதார உலகமயமாக்கலையும், கட்டடற்ற வணிகத்தையும் ஏற்படுத்தும்.” என்று கூறினார்.
இந்த ஒப்பந்தம் சீனாவின் மின்சார கார், சுகாதாரம், தொலைத் தொடர்பு மற்றும் நிதிச் சேவைத் துறைகள் உள்ளிட்ட பகுதிகளுக்குள் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் நுழைவதற்கு வழி வகுக்கும். அதே போல் ஐரோப்பாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையை சீனாவிற்கு திறக்க இது அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வர பல மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் ஐரோப்பிய யூனியனின் தலைவராக உள்ளார். அவர் பதவி முடிவடைய ஒரு நாளே உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்பதற்கு முன்னரே இதனை முடித்துக்கொள்ள சீனா தரப்பில் சலுகைகளை காட்டியுள்ளனர். ஜோ பைடன் ஐரோப்பிய யூனியனுடன் மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்திருந்தார். இரு நாடுகளிடையேயான இந்த ஒப்பந்தம் அவருக்கு கிடைத்த பெருத்த அடி என்று கூறுகின்றனர்.
சர்வதேச தொழிலாளர்கள் சட்டங்களை கொஞ்சமும் மதிக்காத சீனாவுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதற்கு பலரும் கண்டனும், கவலைகளும் தெரிவித்துள்ளனர். அவசர ஒப்பந்தத்தை விட ஒரு நல்ல, நடுநிலையான ஒப்பந்தம் சிறந்தது என போலந்து அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE