புதுச்சேரி; பிறந்த ஒரே நாளில் குழந்தை இறந்ததை கண்டித்து உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி வீராம்பட்டினம், நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் எழில்குமார்,26; மீனவர். இவரது மனைவி வினோதினி,23; நிறைமாத கர்ப்பிணியான இவர் தலை பிரசவத்திற்காக கடந்த 28ம் தேதி எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 29ம் தேதி மாலை 5.30 மணிக்கு அறுவை சிகிச்சை முறையில் வினோதினிக்கு ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில், நேற்று காலை 6.30 மணிக்கு குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது. இதனை அறிந்து கதறி அழுத எழில்குமார் மற்றும் அவரது உறவினர்கள், மருத்துவ நிர்வாகத்தை கண்டித்தும், குழந்தை இறப்பிற்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.அவர்களிடம், மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி முரளி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எழில்குமார் குடும்பத்தினர், ஏற்கனவே தங்களது குடும்பத்தில் இருந்து இரண்டு குழந்தைகள் இந்த மருத்துவமனையில் இறந்துள்ளது. இப்போது தலைப் பிரசவத்திற்காக வந்த வினோதினி குழந்தையும் இறந்துள்ளது. குழந்தையின் இறப்பிற்கு காரணமான மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.இது குறித்து விசாரணை நடத்தி 2 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உறுதியளித்தார்.அதனையேற்று எழில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE