பழவேற்காடு - பழவேற்காடில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, இன்று மாலை முதல், செக்போஸ்ட் அமைத்து வாகனங்கள் தணிக்கை செய்யப்பட உள்ளதாக, பொன்னேரி டி.எஸ்.பி., தெரிவித்து உள்ளார்.பழவேற்காடில் உள்ள அழகிய கடற்கரையில், ஜாலியாக குளித்து விளையாடவும், கலங்கரை விளக்கம், டச்சு கல்லறைகள், பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை காணவும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் அங்கு வருவர்.தற்போது, கொரோனா ஊரடங்கு, ஜனவரி, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், நாளை புத்தாண்டு தினத்தில், சுற்றுலாப் பயணியர்பழவேற்காடு வருவதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.அதைத் தொடர்ந்து, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில், செக்போஸ்ட் அமைத்து போலீசார் வாகன தணிக்கையில்ஈடுபட உள்ளனர்.நள்ளிரவில் புத்தாண்டை கேக் வெட்டி, மதுகுடித்து கொண்டாடுவதற்காக செல்லும் வாகனங்களுக்கு, இன்று மாலை முதல், போலீசார் கிடுக்கிப்பிடி போட உள்ளனர்.இது குறித்து பொன்னேரி டி.எஸ்.பி., கல்பனாதத் தெரிவித்ததாவது:சென்னை - -தடா செல்லும் வாகனங்களை சோழவரம் டோல்பிளாசாவிலும், பழவேற்காடு செல்லும் வாகனங்களை, ஆண்டார்மடம், போலாச்சியம்மன் செக்போஸ்ட்டுகளிலும், இன்று மாலை முதல், தணிக்கை செய்யப்படும்.புத்தாண்டு கொண்டாட வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவர். மீறுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். பழவேற்காடு பகுதியிலும், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட உள்ளன. தடை இருப்பதால், சுற்றுலாப் பயணியர் பழவேற்காடு வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE