பெங்களூரு : "குடிசைப்பகுதி மக்களுக்கு, உரிமைப்பத்திரம் வழங்கும் இந்நிகழ்ச்சி, என் வாழ் நாளிலேயே அற்புதமான நிகழ்ச்சியாகும்," என, வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
பெங்களூரு கோவிந்தராஜ நகர் சட்டசபை தொகுதியின், குடிசைப்பகுதி மக்களுக்கு, உரிமைப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இதில் அமைச்சர் சோமண்ணா பேசியதாவது:குடிசைப்பகுதி மக்களுக்கு, உரிமைப்பத்திரம் வழங்குவது, அரசின் மகத்துவமான திட்டமாகும். இந்நிகழ்ச்சி, என் வாழ் நாளிலேயே அற்புதமான நிகழ்ச்சியாகும். மாநிலத்தின், அனைத்து மாவட்டங்கள், நகராட்சிகள், பட்டண பஞ்சாயத்து உட்பட, 3 லட்சத்து, 14 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும். 490 பேருக்கு, வீடு கட்ட ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
குடிசைப்பகுதி மக்களுக்கு கிடைத்த உரிமைப்பத்திரத்தை, எந்த காரணத்துக்காகவும், மற்றவருக்கு விற்கக்கூடாது. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பின், 83 ஆயிரத்து 119 வீடுகள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. 17 ஆயிரம் வீடுகளை கட்டி முடித்து, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் வேளையில், 15 ஆயிரம் வீடுகளை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குடிசைப்பகுதி மக்களுக்கு, உரிமைப்பத்திரம் வழங்குவதன் மூலம், அவர்களின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறியுள்ளது.
8,633 ஏக்கர் பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் பயனடையும்.மாநிலம் முழுவதும், 2,750 குடிசைப்பகுதிகள் உள்ளது. பெங்களூரில் 409 குடிசைப்பகுதிகள் உள்ளது. இவற்றில் 3.21 லட்சம் குடும்பங்களின், 15 லட்சம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலான குடிசைப்பகுதிகளில், 50 சதவீதம் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் வசிக்கின்றனர்.கர்நாடக குடிசை மாற்று வாரியம் உருவானதிலிருந்து, 2019 வரை வெவ்வேறு திட்டங்களின் கீழ், மொத்தம் ஒரு லட்சத்து, 28 ஆயிரம் வீடுகள் கட்டி, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE